முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதில் 25.11.2025 அன்று காலை கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறார். மாலையில் தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து 26.11.2025 அன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லானின் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்துவைக்கிறார். தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்கிறார். மேலும் சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். மாலையில், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை பரமசிவனின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கிறார்.
விரிவான பயணத் திட்டம்
25.11.2025 அன்று காலை. உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்கள்.
TNRise கோவையில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி
அதனைத் தொடர்ந்து. அன்று மாலையில் தொழில் துறை சார்பில் நடைபெறும் "TNRise" நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் திறப்பு
இரண்டாம் நாளான 26.11.2025 அன்று காலை 10.00 மணியளவில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்கள்.
மாவீரன் பொல்லான் அவர்களது வீரத்தை போற்றும் வகையில் ஜெயராமபுரத்தில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டித்தருமாறு, பொல்லான் வீர வரலாறு மீட்புக் குழு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, அரசு 4.90 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.11.2025 காலை 10.00 மணியளவில் திறந்து வைக்கிறார்கள்.
ஈரோடு மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அதனைத் தொடர்ந்து, ஈரோடு, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
பால்வளத் தந்தை பரமசிவன் சிலை திறப்பு
சின்னியம்பாளையத்தில் பிறந்து நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தன்னுடைய அயலாத முயற்சிகளால் பால் உற்பத்திகளைப் பெருக்கி, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தைக்கு நன்றி செலுத்தும் வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில், ரூ.50 லட்சம் செலவில் பால்வளத் தந்தை பரமசிவனின் திருவுருவச் சிலையினை நிறுவி 26.11.2025 அன்று மாலை 5.00 மணியளவில் திறந்து வைக்கிறார்.