விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி , அதே ஊரைச் சேர்ந்த விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க ஒன்றிய செயலாளருமான திருவக்கரை பாஸ்கரன் என்பவர் தன்னை கடந்த ஆறு மாதங்களாக மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திமுக நிர்வாகி மீது பாலியல் புகார் !
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க ஒன்றிய செயலாளருமான திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் அத்துமீறல், மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளைக் கூறி, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (35) அளித்த புகார் மனுவில்.,
வீடு கட்டுவதற்காகத் தேவையான பொருட்களை வாங்கும் விவகாரத்தில், திருவக்கரை பாஸ்கரன் என்பவருடன் விஜயலட்சுமிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மத்திய மாவட்டத்தின் வானூர் மேற்கு ஒன்றிய செயலாளராக (முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) இருக்கும் திருவக்கரை பாஸ்கரன், விஜயலட்சுமியை கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
பாஸ்கரன், விஜயலட்சுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், மேலும் அந்தச் சம்பவங்களை வீடியோ எடுத்து, அதனை வைத்து தொடர்ந்து மிரட்டியதாகவும் விஜயலட்சுமி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாலியல் வற்புறுத்தல் மட்டுமின்றி, கொலை மிரட்டலும் விடுத்ததாகப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தன்னையும், தனது மகனையும் பாஸ்கரனிடமிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திருவக்கரை பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள தி.மு.க ஒன்றிய செயலாளர் திருவக்கரை பாஸ்கரனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் அத்துமீறல்
பாலியல் அத்துமீறல் என்பது மற்றொருவரின் சம்மதமின்றி பாலியல் ரீதியான தொடுதல், நடத்தை அல்லது செயல்களில் ஈடுபடுவது ஆகும். இது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் (பணியிடத்தில், பொது இடங்களில்), பாலியல் சுரண்டல், மற்றும் பாலியல் வன்முறை போன்ற பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இது உடல்ரீதியான, மனரீதியான மற்றும் சமூகரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் இது ஒருவரின் மனித உரிமைகளை மீறும் செயலாகும்.