கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர் துரைமுருகன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பாராட்டி பேசியதற்கு, துரைமுருகன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.


சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெற உள்ளது. துரைமுருகன் பொறுப்பு வகிக்கும் இந்த துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்பு முதல்வர் பாராட்டி பேசினார். சட்டப்பேரவையில் பொன்விழா காணும் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதன் பின்னர் முதலமைச்சர் பேசுகையில், “நூற்றாண்டு காணும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டை கடந்தவர் துரைமுருகன். 50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பொன்விழா நாயகனாக இருக்கிறார். கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருக்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எனக்கு வழிதுணையாக இருக்கிறார். கலைஞர், பேராசிரியர் இடத்தில் துரைமுருகனை வைத்து பார்க்கிறேன். மனதில் பட்டதை உறுதியுடன் சொல்லக்கூடியவர். எந்தத் துறையை கொடுத்தாலும் சிறப்பாக பணியாற்றுபவர் துரைமுருகன். கலைஞருக்கு அருகில் மட்டுமல்லாமல், மனதிலும் ஆசனமிட்டு உட்கார்ந்திருப்பவர் துரைமுருகன். துரைமுருகனுடன் கலைஞர் பேசிக்கொண்டே இருப்பதை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். சூடாக பேசுவார், உடனே அடுத்த விநாடி இனிமையாக பேசும் ஆற்றல் கொண்டவர் அவர். இந்தக் கூட்டத்தை அழவைக்க நினைத்தால் அழவைப்பார், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைப்பார். பேரவையில் முதலாவதாக நீர்வளத்துறை மானிய கோரிக்கை நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்று பேசினார்.


 






முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து, “அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர். ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர்” என்று சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.


இதன்பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் பட்டவனாக வாழ்நாள் முழுவதும் இருப்பேன். இவ்வளவு பற்று பாசமும் முதல்வர் என் மீது வைத்திருப்பார் என நினைக்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.