TN Assembly: கடந்த 9ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவு பெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


சட்டப்பேரவை கூட்டத்தொடர்:


இந்த ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. வழக்கமாக ஒரு கூட்டம் முடிந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் கூட வேண்டும்.


அதாவது ஏப்ரல் 21 ஆம் தேதி முடிவடைந்த கூட்டத்தை தொடர்ந்து அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில்,  அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர்  இன்று நிறைவடைந்தது. சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசப்பட்டது.


மூன்று நாட்கள் என்ன நடந்தது?


சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள் அன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் காலமான பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


இதனை  அடுத்து, முதல் நாளில்,  காவிரி நீர்  மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் கொண்ட வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் ’சமாதானம்’ எனும் புதிய திட்டத்திற்கான சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார். 


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, வட்டி, அபராதம் என பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த நிலுவை தொகை குறித்து பல சமாதான திட்டம் செயல்படுத்தி இருந்தாலும் புதிய அனுகுமுறை மற்றும் கூடுதல் சலுகைகளுடன் இந்த திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது.


இந்த திட்டத்திற்கு கீழ் வரியாண்டில் 50 ஆயிரத்திற்கும் கீழ் வரி நிலுவையில் இருப்போருக்கு அதாவது வரி, வட்டி, அபராத தொகை செலுத்த வேண்டியவர்களுக்கு இந்த நிலுவை தொகை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். தமிழ்நாட்டில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.  இதன் மூலம் 95,502 சிறு வணிகர்கள் தனது நிலுவை தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைவார்கள்” என்றார். 


இதனை தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று, வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதேபோல, தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்தார்.