சட்டப்பேரவையை பொதுக்கூட்ட மேடையாக மாற்றி விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குறித்து பேசிய பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்தும், 10 மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுதொடர்பாக பிற கட்சியின் சட்டம்னற உறுப்பினர்களின் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது பேசிய பாஜக எம்.எல்.ஏ.,வும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், “இன்றைக்கு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை பேச தொடங்கும் முன் நீங்கள் (சபாநாயகர்) மத்திய அரசையோ, ஆளுநரையோ குறைத்து பேசக்கூடாது என சொன்னீர்கள். ஆனால் அப்படி சொல்லிவிட்டு பேச விட்டு கேட்டு கொண்டிருக்கிறீர்கள்” என தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, “ கோப்பு விஷயத்தில் எடுக்கப்பட்ட முடிவை பற்றி தான் உறுப்பினர்கள் பேசினார்கள். தனிப்பட்ட முறையில் பேசியது எதுவும் பதிவாகவில்லை என கூறினார். மேலும் ஆளுநர் என்பவர்கள் மாறலாம். நாளைக்கு நீங்கள் கூட ஆளுநராக வரலாம் என சொன்னபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக முதலமைச்சர் தனித் தீர்மானம் கொண்டு வருவது என்பது வேறு. அதை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது வேறு விஷயம். அவை முன்னவர் சிறுபிள்ளைத்தனம் என்பது குழந்தைத்தனம் என்பது சொன்னார்கள். அது அதைவிட மோசமானது. இந்த சட்டமன்றம் மிகப்பெரிய மாண்பும், மரபும் மிக்கது. இதனை பொதுக்கூட்ட மேடையாக மாற்றி விட கூடாது.
முதலமைச்சர் தீர்மானங்கள் கொண்டு வந்து நிதானமான சொற்களோடு பேசினார், ஆனால் இங்கு நிறைய பேர் பாஜக அரசு, ஆளுநர் என நிதானமில்லாமல் நிறைய பேர் பேசினார்கள். கருத்து வேறுபாடு இருக்கலாம். என்னுடைய நினைவு சரியாக இருக்குமேயானால், வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநருக்கு தான் அதிகாரம் இருக்க வேண்டும் என 1998 ஆம் ஆண்டு இதே சபையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருக்கும் போது தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் இன்னைக்கு வேந்தர்களை முதலமைச்சரே நியமிக்க வேண்டும் என கோரி தீர்மானம் போட்டிருக்கிறோம். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அப்போதெல்லாம் வேந்தர்கள் தேர்வு செய்வது பற்றி அரசினுடைய பரிசீலனைக்கு கொண்டு வந்து கலந்து பேசி நியமனம் செய்வது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல என்பதால் தான் நாங்கள் எதிர்கிறோம்.
பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், எமர்ஜென்சி காலக்கட்டத்தில் கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் தான் மத்திய அரசு கல்வி கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பட்டியலில் இருக்கும் உயர்கல்வி நுழைவுத்தேர்வுகள், வேந்தர்கள் நியமனம் போன்றவை மத்திய அரசு வசமே உள்ளது. அதனை மாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் முனைந்திருக்கிறார்.
வேந்தர் பதவி அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இப்படியான சூழலில் ஆளுநரிடம் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சட்ட மஓசாதாக்கள் எதற்கு திருப்பி அனுப்பப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து, அதற்கு தந்தாற்போல சட்டங்களை மாற்றி அமைத்து நாம் அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்பது பாஜகவின் வேண்டுகோளாக உள்ளது” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, “கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் தான் இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது. ஆளுநர் அரசியல் செய்பவராக இருக்கிறார். ஆளுநர்களால் தேர்வு செய்யப்படும் வேந்தர்கள் மக்களால் தேர்வு செய்யப்படும் அரசுக்கு எதிராக கூட மாறி விடுவார்கள். எனவே தான் அந்த அதிகாரம் அரசுக்கு வேண்டும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்” என கூறினார்.