தமிழ்நாட்டில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இல்லங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சமீப நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழக போலீசார் கைது செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


திண்டுக்கல் மருத்துவர் ஒருவரிடம் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற முயன்றபோது தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அந்த அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.


அமலாக்கத்துறை ஐ.டி.கார்டு


பிடிபட்ட நபர் அங்கிட் திவாரி என்றும் அவர் அமலாக்கத்துறையில் பணி செய்வது போன்று அடையாள அட்டை வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பிடிபட்ட அங்கிட் திவாரியை திண்டுக்கலில் உள்ள தனி இடத்தில் வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பணக்காரர்களை குறி வைத்து மிரட்டல்


இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கிட் திவாரி என்ற அதிகாரி அமலாக்கத்துறை ரேடாரில் உள்ள பணக்காரர்களை குறி வைத்து செயல்பட்டது.  அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லியும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளோரை தொடர்பு கொண்டு வழக்கை முடித்து தருவதாக பேரம் பேசியும் லட்ச கணக்கில் பலரிடம் பண பறித்தது தெரியவந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


உஷாரான திண்டுக்கல் மருத்துவர்


திண்டுக்கலை சேர்ந்த மருத்துவரின் பணக்கார நண்பர்கள் சிலர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய முடிவு எடுத்திருக்கிறது என்றும் அப்படி செய்யாமல் இருக்க 50 லட்ச ரூபாய் முதல் கட்டமாக பணம் கொடுக்க வேண்டும் என்று தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறிய அங்கிட் திவாரி மிரட்டியிருக்கிறார். அவரது மிரட்டலுக்கு பயந்ததுபோல முதற்கட்டமாக 20 லட்சம் பணம் கொடுக்க ஒத்துக்கொண்ட மருத்துவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


டோல் பிளாசாவில் சுற்றி வளைத்த போலீஸ்


இந்நிலையில், திண்டுக்கலில் உள்ள தனியார் இடத்தில் அங்கிட் திவாரி மருத்துவரிடம் பணம் பெற்று திரும்பும்போது, மதுரை – திண்டுக்கல் சாலையில் உள்ள டோல்பிளாசில் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும்களவுமாக பிடித்துள்ளனர். அவரை மீண்டும் திண்டுக்கல் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்


உண்மையிலேயே அமலாக்கத்துறை அதிகாரி


பிடிபட்டவர் மத்திய அரசின் அமலாக்கத்துறையில் பணிபுரியும் அதிகாரி என்று கூறியுள்ளதால், அவர் உண்மையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிதானா ? இல்லை போலியானவரா என்ற கோணத்திலும் தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் இதற்கு முன்னர் தான் நாக்பூரில் பணியாற்றியதாகவும் சில மாதங்களுக்கு முன்னரே தமிழக அலுவலகத்திற்கு பணியிட மாறுதலில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


கைதா இல்லையா ? - விரைவில் விளக்கம்


விசாரணையில் முழு விவரம் கிடைத்த பின்னரே கைது செய்யப்பட்டுள்ளாரா ? இல்லையா என்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி திமுகவினருக்கு குடைச்சல் கொடுத்துவரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரையே தமிழக போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.