திருவாரூர்: விஷத்தன்மை கொண்ட மருந்தை குடித்து உயிருக்கு போராடிய தன்னை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு கேக் வெட்டி ஊட்டிவிட்ட இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் விளமல் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் பேரா க்யூட் எனும் நச்சுத்தன்மை கொண்ட களைக்கொல்லியை குடித்த நிலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வகை நச்சுப் பொருளுக்கு விஷமுறிவு மருந்து இல்லாத நிலையில் கோல்டன் ஹவர் எனப்படும் எட்டு மணி நேரத்திற்குள் அந்த இளைஞர் அங்கு அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு தீவீர சிகிச்சை அளித்து அவர் காப்பாற்றப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு நன்றி
இந்த நிலையில், அந்த இளைஞர் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தனது உயிரை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு கேக் வெட்டி ஊட்டி விட்டார். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் வசந்தகுமார் கூறுகையில், "இந்த வகையான நச்சுப் பொருளுக்கு விஷமுறிவு மருந்து இல்லாத போதிலும் ஹீமோபெர்ஃபியூஷன் எனப்படும் நவீன சிகிச்சை முறையில் சிகிச்சை அளித்து சிறுநீரகம் மற்றும் கல்லீரல் குறைவான அளவில் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஸ்டீரராய்டு மருந்துகள் மூலம் அதனை சரி செய்து இந்த இளைஞர் காப்பாற்றப்பட்டுள்ளார். இவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்ட போதும் எதிர்காலத்தில் மீண்டும் டயாலிசிஸ் செய்யும் தேவை ஏற்படாது இவர் பூரண குணமடைந்து மறு ஜென்மம் எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.