Continues below advertisement

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், SIR(வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம்) பணி இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தடை கோரி, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

SIR-க்கு தடை கோரி பல்வேறு கட்சிகள் மனு

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் SIR பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி, திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. தமிழ்நாட்டில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகளை மேற்கோள்காட்டி, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில், SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

Continues below advertisement

இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "SIR நடத்தப்படும் காலம் பருவமழைக் காலம் என்றும், அப்போது அதிக மழைப் பொழிவு இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் SIR பணிகளை மேற்கொள்ள முடியாது என்று திமுக சார்பில் வாதிடப்பட்டது.

மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள், வேறு மாநில அதிகாரிகள் பருவமழை வெள்ளம் தொடர்பான பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் அறுவடை திருவிழாவான பொங்கல்  பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்றும், அந்த நேரத்தில் SIR பணிகளை மேற்கொள்வது சிக்கலை ஏற்படுத்தும்" எனவும் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள்

இதையடுத்து, தேர்தல் ஆணையம் இதற்கான அனைத்து விளக்கங்களையும் கொடுப்பார்கள் என நீதிமன்றம் பதில் அளித்தது. அதன்பின், மலைக் கிராமங்கள் போன்ற இடங்களில் இணையதள வசதி கிடைப்பது சிரமம் என்றும், சரியாக ஒரு மாதம் இருப்பதால், வாக்காளர்களுக்கு போதிய கால அவகாசம் இருக்காது எனவும் திமுக சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ஆனாலும், இது தொடர்பாக அனைத்து மனுக்களின் நகல்களையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. மேலும், 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் அதற்கு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இதனிடையே SIR பணிகள் தொடர்ந்த நடைபெறலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.