திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 429 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.704 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அறுவடை பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 378 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 99 சதவீதம் அறுவடை முடிவடைந்த நிலையில் இதுவரை இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 429 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் குறுவை சாகுபடி பணியில் 93 ஆயிரத்து 986 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இரண்டு மடங்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தினசரி மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம் ஆகிய ரயில் நிலையத்திலிருந்து இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வெளி மாவட்டத்திற்கு அரவைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை 704 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 37,956 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு அளவிற்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.