பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி கிணறை மூடும் தேதியை அறிவிக்க ஓஎன்ஜிசி நிர்வாகம் மறுத்ததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓஎன்ஜிசி விளை நிலங்களுக்கு அடியில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் ஆகியவை எடுத்து வருகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு விவசாய நிலங்கள் முழுவதுமாக பாதிக்கப்படுவதாக கூறி கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டமும் இந்த பகுதியில் செயல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் பெரியகுடி கிராமத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி குழாய் வெடித்து மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்பட்டது. அதனை யடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த கிணறு மூடப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது அந்த ஓஎன்ஜிசி கிணற்றில் பழுது வேலை இருக்கிறது. அதற்கு பணிகளை செய்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் ஓஎன்ஜிசி நிர்வாகம் கடிதம் கொடுத்திருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் ஓஎன்ஜிசி நிர்வாகம் அந்த பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது உடனடியாக முழுமையாக அந்த கிணற்றை மூட வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பெரியகுடி பகுதியில் ஓஎன்ஜிசி புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கவும் அல்லது பழைய கிணறு பணிகளை தொடங்கவோ அனுமதிக்க மாட்டோம் என உத்தரவாதம் கொடுத்திருந்ததாக விவசாய சங்க தலைவர் டி ஆர் பாண்டியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஓஎன்ஜிசி கிணறு மூடும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் ஓஎன்ஜிசி அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்த பொழுதும் அதிகாரிகள் மூடும் தேதியை தற்பொழுது தங்களால் அறிவிக்க முடியாது என கூறினர். இதனால் இந்த கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும் அரசு அதிகாரிகள் ஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் குற்றம் சாட்டினார். மேலும் டெல்டா மாவட்டம் முழுவதும் அனைத்து ஓஎன்ஜிசி குழாய்களையும் மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் டி ஆர் பாண்டியன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்