திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 

Continues below advertisement


குறிப்பாக திருவாரூர், நன்னிலம், குடவாசல், சேந்தமங்கலம், எட்டியலூர், கங்களாஞ்சேரி, ஆண்டிப்பந்தல், முடிகொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் விடுமுறை எடுக்காமல் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.




கனமழை எச்சரிக்கை - விடுமுறை எடுக்காமல் பணியாற்ற அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் உத்தரவு


திருவாரூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு நாளை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சி, பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசிய துறையில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆவின் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


குறிப்பாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அடுத்த உத்தரவு வரும்வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட முழுவதும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு வருவாய் துறை மூலம் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மழை அளவை பொறுத்து தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.