350 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல் - குட்கா புரோக்கர் கைது

Continues below advertisement

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தமிழ் நகர் 7 - வது பிளாக் 181 வது தெரு பகுதியில் புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் கடந்த 9 ஆம் தேதி சோதனை செய்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் இருந்து சுமார் 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 181 வது தெருவை சேர்ந்த சல்மான் ஷெரீப் ( வயது 36 ) என்ற நபரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் படி சல்மான் ஷெரிப் பெங்களூரு சென்று 350 கிலோ குட்கா பொருட்களை வாங்கி வந்து அதில் 250 கிலோவுக்கு மேல் குட்கா பொருட்களை ஊத்துக் கோட்டையில் விற்பனை செய்து விட்டு மீதி 68 கிலோ குட்கா பொருட்களை வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது. 

Continues below advertisement

மேலும் இவருக்கு குட்கா பொருட்களை பெங்களூருவைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கொடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சிவக்குமாரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சல்மான் ஷெரிப்பிடம் இருந்து சிவக்குமார் பற்றிய தகவல்களை வாங்கி தங்களுக்கு குட்கா பொருட்கள் வேண்டும் பணத்தை சென்னையில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

அதனை நம்பி சிவகுமார் கொடுங்கையூர் பகுதிக்கு வந்த போது மறைந்திருந்த கொடுங்கையூர் போலீசார் சிவக்குமாரை சுற்றி வளைத்து கைது செய்து கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் பெங்களூர் தீபாஞ்சலி நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் ( வயது 44 ) என்பதும் இவர் பெங்களூருவில் பல இடங்களில் குட்கா பொருட்களை வாங்கி அதை தமிழகத்திற்கு விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது.  இதனையடுத்து சிவக் குமார் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை புளியந்தோப்பில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த நபர் கைது

சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணன் தெரு சந்திப்பு பகுதியில் இரண்டு கும்பல் சண்டை போட்டுக் கொள்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். 

அதில் கல்லறை தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்கின்ற கபாலி ( வயது 21 ) என்பவரிடமிருந்து 19 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இவரை பிடிக்கும் போது இவருடன் இருந்த விஜய் என்ற நபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் வெங்கடேசன் என்ற கபாலியிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்ததும் , விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து வெங்கடேசன் என்கின்ற கபாலி மீது வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.