பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். 


திருவாரூர் அருகே உள்ள கிடாரம் கொண்டான் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று மதியம் பி.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு நடைபெற்றது. 


தேர்வறையில் இருந்த பேராசிரியர் மாணவர்களின் ஹால் டிக்கெட் போன்றவற்றை பரிசோதிக்கும் போது பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுத வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அந்த இளைஞரை தனி அறையில் அமர வைத்து விசாரித்த போது அவர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த மாதவன் மகன் 29 வயதான திவாகரன் என்பதும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு வருட உடற்கல்வி ஆசிரியர் படிப்பை படித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவர் தற்போது திருவாரூரில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.


மேலும் திவாகரன் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் லெட்சுமாங்குடி தோட்டச்சேரியை சேர்ந்த 48 வயதான பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கு யாருக்கு தேர்வு எழுதுகிறோம் என்பது தெரியாது என்றும் தன்னை திருவாரூர் புலிவலம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு  செயலாளர் ரமேஷ் என்பவர் தேர்வு எழுத அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.


இதனையடுத்து தேர்வு மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல்துறையினர் திவாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன் தேர்வு எழுதிய திவாகரன் மற்றும் பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோரை தாலுகா காவல்துறையினர் கைது  செய்தனர். மேலும்  இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இது குறித்து பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் தனது சமூக வலைதள பக்கங்களில் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இளங்கலை பட்டப்படிப்பிற்கான தேர்வு ஒன்றை எனது பெயரில் எழுதிய நபர்க்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனது அரசியல் வளர்ச்சியின் மீது காழ்ப்புணர்வு கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையாக எனது பெயரில் யாரோ ஒருவர் குறிப்பிட்ட தேர்வு எழுதியதாக எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செய்திகள் வெளி வருகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். 


இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் திருவாரூர் மடப்புரத்தில் உள்ள பாஜக பிரமுகர் வாசன் நாகராஜன் என்பவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு வந்த தகவலையடுத்து காவல்துறையினர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும் பாஸ்கர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு திருவாரூர் மாவட்ட பாஜகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண