மதுரை விமான நிலையத்தில் நேற்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் காரை பாஜகவினர் வழி மறித்து காலணி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றார்.
அப்போது பாஜகவினரும் அஞ்சலி செலுத்த வந்ததாக கூறப்படுகிறது. அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு பாஜக கட்சியினர் செலுத்துமாறு, அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிடிஆர் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது, அவரது காரில் பாஜகவினர் காலணி வீசி தாக்கினர். உடனே அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் பாஜகவினரை அப்புறப்படுத்தியதையடுத்து அமைச்சர், அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று தூக்கி எறியப்பட்ட காலணி வேண்டுமென்றால் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் நக்கல் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “ நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் அப்புறம் பேசுறேன். ஆனால் இப்போதைக்கு...
ஏர்போர்ட்டின் பாதுகாப்பு பகுதிக்குள் கட்சிக்காரர்களுடன் வந்த சிண்ட்ரல்லாவே.. செருப்பைத் திரும்பப் பெற விரும்பினால்... எனது ஊழியர்கள் அதை உங்களுக்காக எடுத்து வைத்துள்ளார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்வது குறித்து இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன். தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை, பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை, பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும், பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன்'' என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவினர் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்