Continues below advertisement


திருவாரூர்: பெண் விவசாயி வாங்கிய டிராக்டர் கடனுக்கான தொகையை செலுத்திய பிறகும் நிலப் பத்திரத்தை திருப்பி தராமல் இருந்த இந்தியன் வங்கிக்கு 3 லட்சம் ரூபாய் அபராதமும், 30 நாட்களுக்குள் பத்திரத்தை திருப்பி தராவிட்டால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்தது.


திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி பரமேஸ்வரி [75]. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வடசேரியிலுள்ள இந்தியன் வங்கி கிளையில் டிராக்டர் வாங்குவதற்காக ரூபாய் 6,24,000/- விவசாயக் கடனாகப் பெற்றுள்ளார். அதற்கு ஈடாக தனக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்தை அடமானமாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார். சில தவணைகளை செலுத்திய பரமேஸ்வரி அதன் பிறகு 2013இல் வங்கியை அணுகி தன்னுடைய பாக்கி கடன் தொகையை முழுமையாகச் செலுத்தி விடுவதாகத் தெரிவித்துள்ளார். 


பத்திரத்தை திருப்பி தராத வங்கி


இந்த நிலையில், வங்கி மேலாளர் ரூபாய் 3 லட்சம் மட்டும் செலுத்துமாறு கூறியதன் பேரில் 20/9/2013ல் ரூபாய் 3 லட்சம் செலுத்தியுள்ளார். வங்கி தரப்பில் டிராக்டர் மீதான அடமானத்தை ரத்துச் செய்து ஆர்.சி புத்தகத்திலுள்ள அடமானப் பதிவை ரத்துச் செய்வதற்கான ஆவணங்களை வழங்கியுள்ளனர். அப்போது பரமேஸ்வரி தன்னுடைய நிலப்பத்திரத்தை திருப்பி வாங்கத் தவறிவிட்டார். வங்கி தரப்பிலும் நிலப்பத்திரத்தை திருப்பி தராமல் இருந்துள்ளனர். அதன் பிறகு பலமுறை வங்கியை அணுகி தன்னுடைய பத்திரத்தைக் கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் பிறகு தருவதாகக் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.


இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கும் வங்கி பதில் தரவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பரமேஸ்வரி திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கில் ஆஜரான வங்கி தரப்பு முழுக்கடனையும் செலுத்தி முடிக்கவில்லை. 2013ல் செலுத்திய மூன்று லட்சம் போக ரூபாய் 90,842/- நிலுவையில் இருந்து வந்தது. அந்தத் தொகை ரிலையன்ஸ் சொத்து ரெக்கவரி நிறுவனத்திடம் ஒப்படைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.


ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு


அதனை ஏற்காத திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் நேற்று வழங்கிய தீர்ப்பில் சுமார் 12 ஆண்டுகளாக கடன் தொடர்பாக எந்தவித டிமாண்ட் நோட்டீஸும் அனுப்பாமல் இருந்துவிட்டு தற்போது நீதிமன்றத்தில் வந்து 12 ஆண்டுகளாக கடன் நிலுவையில் இருந்து வந்ததாகவும் அதை வாடிக்கையாளரின் அனுமதியின்றி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததாகவும் வங்கி கூறுவதை ஏற்க முடியாது. 12 ஆண்டுகளாக ஏழை விவசாயியான பரமேஸ்வரிக்கு கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக இந்தியன் வங்கி வடசேரி கிளை திருச்சி மண்டல அலுவலகம் மற்றும் சென்னை தலைமை அலுவலகம் ஆகிய மூன்று தரப்பும் இணைந்து ரூபாய் 3 லட்சம் நஷ்ட ஈடு, ரூபாய் பத்தாயிரம் வழக்கு செலவுத்தொகை வழங்குவதுடன், 30 நாட்களுக்குள் பரமேஸ்வரியின் கடன் கணக்கு தொடர்பாகத் தடையின்மைச் சான்று வழங்கி அடமானத்தை ரத்து செய்து நிலப் பாத்திரத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்றும் தவறினால் தவறும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் ஆயிரம் வீதம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.