சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ, கடந்த 2018ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர் கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த டாக்டர் தாமரைக் கண்ணனை மணந்தார். இதனையடுத்து  கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக கடந்த வாரம் சேர்ந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மகப்பேறு விடுப்பில் சொந்த ஊரான சேலத்திற்கு வந்த தர்மலாஸ்ரீ, சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.



நேற்றிரவு அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தர்மலாஸ்ரீ  கூறுகையில், அரசு மருத்துவமனையில் சுய விருப்பத்தின் பேரில்  சேர்ந்து சிகிச்சை பெற்றதாகவும், சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.



அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்தும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற கருத்து நிலவும் நிலையில் இதனை செய்து காட்டிய தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ் அதிகாரியை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.