தமிழ்நாட்டில் புதிததாக 4 மாநகராட்சிகள் இன்று உதயமாகி உள்ளன. திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சிகளாக துவக்கி வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதால் என்ன பயன்கள் கிடைக்கும்? மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் பெருநகரங்களுக்கு இணையான சாலை வசதிகள், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் அங்கு கொண்டுவரப்படும்.
அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும். பொருளாதார வளர்ச்சி ஏற்பட வழிவகுத்து தரப்படும். அதற்காக, கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மக்கள் தொகையின் அடிப்படையில் பேரூராட்சி நகராட்சியாகவும் நகராட்சி மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளும் 138 நகராட்சிகளும் 490 பேரூராட்சிகளும் அமைந்துள்ளன. இருப்பினும், அதிக மக்கள் வாழும் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்கக் கோரி தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வந்தது.
புதிததாக உருவான மாநகராட்சிகள்: இதையடுத்து, புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கடந்தாண்டு, அறிவிப்பு வெளியிட்டார். அந்த வகையில், புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவண்ணாமலை நகராட்சி, 18 ஊராட்சிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சியின் வாயிலாக 4 புதிய மாநகராட்சிகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம், மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.