திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் அமைந்துள்ள 6-ம் பிரகாரம், கோயில் மதிற்சுவரையொட்டியுள்ள வடஒத்தைவாடை தெருவில், சமீபத்தில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி நடந்தது. அதற்கான பள்ளம் தோண்டும்போது, அந்த பகுதியில் புதைந்து, சிதைந்து கிடந்த கற்களை எடுத்து பாதுகாப்பாக கோயிலில் வைத்திருந்தனர். அவ்வாறு மீட்கப்பட்ட கற்கள் சிலவற்றில், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே, இதுதொடர்பாக முறையாக ஆய்வு செய்திட கோயில் நிர்வாகம் அனுமதித்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், தொல்லியல் ஆலோசகர் வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த தாசில்தார் ச.பாலமுருருகன், த.ம.பிரகாஷ், சி.பழனிசாமி, மதன்மோகன், சிற்றிங்கூர்ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது, இந்த கல்வெட்டுகள் முதலாம் ராஜராஜன் காலத்தை சேர்ந்தது என தெரியவந்தது. மேலும், கோயில் வழிபாட்டுக்கு நெல், அரிசி, நெய் போன்றவற்றை வழங்குவதற்கான விபரங்கள் அதில் இடம் பெற்றிருந்ததும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் பி.வெங்கடேசனிடம் பேசுகையில்,
தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டில், சதுர்வேதி மங்கலத்து சபையார் திருவண்ணாமலை மகாதேவருக்கு என எழுதப்பட்டுள்ள கல்வெட்டில், கோயில் கருவூலத்தில் இருக்கும் பொன் முதலானவற்றில் கிடைக்கும் வட்டியிலிருந்து ஆண்டாண்டு தோறும் பங்குனி திருவிழா நடத்துவது பற்றி குறிப்படப்பட்டுள்ளது. கல்வெட்டின் ஒரு பகுதி மட்டுமே இருப்பதால், மற்ற முழுமையான விபரங்கள் அதில் இல்லை. இந்த கல்வெட்டின் எழுத்துக்கள் அடிப்படையில் நடத்திய ஆய்வில், முதலாம் ராஜராஜன் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிகிறது. மற்றொரு கல்வெட்டில் ஒப்பந்தங்களாக சிலகுறிப்புகள் உள்ளன. அதில், கோயில் இறைவனுக்கு தினசரி வழிபாட்டிற்கு ஒருகலம் நெல்லும், 3 குறுணி அரிசியும் வழங்கப்பட வேண்டும் என்றும், மற்றொரு ஒப்பந்தமாக உணவு படைத்தலின்போது 4 நாழி நெய் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, பண்டாரத்தில் வைப்பாக உள்ள ஒரு கழஞ்சு பொன்னும், அதிலிருந்து வரும் வட்டியை கொண்டு இந்த ஏற்பாடு நடத்தி வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் உள்ள ஜகதி என்ற உறுப்பில் பல அழகிய சோழர் கால குறுஞ் சிற்பங்கள் உள்ளன.
குறிப்பாக, சம்ஹாரமூர்த்தி, மார்கண்டேயன் சிற்பம் உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன. இதன் எழுத்துக்களை ஆய்வு செய்கையில், இந்த கல்வெட்டு முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என ெதரிகிறது. இந்த பகுதியில் மற்றொரு துண்டு கல்வெட்டு கிடைக்கப் பெற்றது. இதுவும், கோயில் அதிட்டானத்தின் ஒரு துண்டு பகுதியாக உள்ளது. இந்த கல்வெட்டில் திருவண்ணாமலை உடையதேவர்க்கு செட்டியாகிய சதூரான பெருந்தச்சனுக்கு வைச்சபூண்டி நிலமாவது என்றும், புடவை செய்து கொடுத்தோம் என்றும், அண்ணா நாட்டு திருவண்ணாத்து செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் கோயில் என்றும், பெரிய செறுவு காணிக்கையாக செய்து குடுத்தேன் இம்மடமுடைய என்றும் துண்டு துண்டாக கல்வெட்டு வரி காணப்படுகிறது. அண்ணா நாட்டு திருவண்ணாத்து செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் ஸ்ரீகோயில் என்ற தொடரிலிருந்து இக்கோயிலில் சோழ அரசி செம்பியன் மாதேவியார் திருவண்ணாமலைக்கு அருகில் அல்லது இக்கோயிலில் தனது பெயரில் செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் என்ற கோயிலை அமைத்த செய்தி கிடைக்கிறது. இந்த கோயில் தற்போது எங்குள்ளது என்பது பற்றிய எந்த குறிப்பும் மற்ற கல்வெட்டிலோ அல்லது வேறு எங்கேயும் பதிவு செய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. மேலும், இதில் நகரீஸ்வரம் என்று குறிப்பிடுவது திருவண்ணாமலையை குறிப்பதாக கருத இடம் உள்ளது.
திருவண்ணாமலை கி.பி.9 மற்றும் கி.பி.10ம் நூற்றாண்டிலேயே நகர் மயமான ஒரு ஊராக இருந்திருக்கும் என்று அறியலாம். இந்த கல்வெட்டின் காலம் கி.பி.10ம் நூற்றாண்டின் மையப்பகுதியாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள 3 துண்டு கல்வெட்டுகளும் சோழர்கள் காலத்தியது என்பதும், கல்வெட்டுகளில் இதுவரை அறியப் பெறாத செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது என்பதும் சிறப்புக்குரியது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புனரமைப்பின்போது வேறு கற்கள் பயன்படுத்தி வரலாற்றுக்கு முக்கியமான செய்திகளை தரும் இந்த கல்வெட்டுகள் கொண்ட கற்களை அப்புறப்படுத்தியுள்ளனர். திருவண்ணாமலை கோயிலில் அதிக அளவில் சோழர்கள் கால கல்வெட்டுகளும், அழகிய சிற்பங்களும் இருந்திருக்கும். திருவண்ணாமலை 1,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நகரமாக இருந்துள்ளது என்பதற்கான சான்றுகள் இக்கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், இந்த துண்டு கல்வெட்டுகளை கோயில் வளாகத்தில் வைத்து பாதுகாப்பது அவசியம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.