கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ். 49 வயதான இவர் ஹோமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டை, கடந்த 45 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு காவல் துறையினர் ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக திருப்பூரில் வைத்து எர்வினை கைது செய்தனர். பின்னர் கேரள மாநிலத்திற்கு அவரை அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் தங்கராஜ் எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த போலி தங்க கட்டிகள் மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், 3 ரப்பர் ஸ்டாம்பு, துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தங்கராஜ், “கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் ஏவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை காணவில்லை என என்னிடம் கூறினார்.
அதற்கு நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறிய போது, அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் அவர் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்ப்பதாக கூறினார். வீட்டிற்கு எப்போது வருகிறார் போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து போத்தனூர் காவல் துறையினர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? அவர் உண்மையிலேயே டாக்டர் தானா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எர்வினை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்