திருவள்ளூர்: திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.15.67 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முருகன் கோயில் கோபுர வடிவில் முகப்பு கட்டும் பணி நடைபெறுகிறது.
முருகன் கோயில் கோபுர வடிவில் பேருந்து நிலையம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் புதிய பேருந்து நிலையம் 15.67 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு தொடங்கிய இந்த பணி, சில காரணங்களால் தாமதமானது. தற்போது மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் திறக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
திருத்தணி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு ஆகும். திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் திருத்தணி வழியாகத் தான் கடந்து செல்கின்றன. இதனால் திருத்தணியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். தற்போதுள்ள அண்ணா பேருந்து நிலையம் சிறியதாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
இதனை தடுப்பதற்காக புதிய பேருந்து நிலையம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையமானது திருத்தணி - அரக்கோணம் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை அருகில் 4.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படுகிறது. அரசு சார்பில் இதற்காக 12.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
பேருந்து நிலையத்தை 18 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் 8 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் பேருந்து நிலையத்தின் முகப்பில் முருகன் கோயில் கோபுரம் வடிவம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கூடுதலாக ரூ.2.93 கோடி ஒதுக்கப்பட்டது. பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டன. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகராட்சி அதிகாரிகள் பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி தெரிவிக்கையில், “புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், சுற்றுச்சுவர் மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் முருகன் கோயிலில் உள்ளது போன்று மூன்று கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு கோபுரப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் ஒரு கோபுரம் மற்றும் விடுபட்ட பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட பயணிகளும் சிரமமின்றி பேருந்துகளில் பயணிக்க ஏதுவாக இருக்கும்" என்றார்.