மதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, அக்கட்சி அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.  


செய்தியாளர் சந்திப்பு:


கட்சி தலைமையுடன் நிலவி வந்த மோதலுக்கு மத்தியில் திருப்பூர் துரைசாமி திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் வசித்து வரும், அவைத்தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும், அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இனி அந்த கட்சியில் தொடரமாட்டேன் என்றும் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “மதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து  தங்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து வந்தார். இதனை தலைமைக் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுமையாக நம்பி வந்தனர்.


ஆனால், தனது மகனான துரை வைகோவை அரியாசனத்தில் அமர்த்த விரும்பும் தங்களது நடவடிக்கையில்  என்னை போன்றவர்களுக்கு  உடன்பாடு இல்லை. பேரரிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு  என்று வாழ்ந்து அரசியல் செய்து வந்த என்னால் இனியும் வைகோ உடன் பயணிக்க இயலாது. அவர் மீது நம்பிக்கை வைத்து  அன்று உயிர் நீத்த தொண்டர்களுக்காக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுவது நல்லது. ஏனெனில் மதிமுகவிற்கு என்று தனி எதிர்காலம் இல்லை. எனவே, மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். அதே வேளையில் , எந்த ஒரு  அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. ஆனால், கோவை பெரியார்  மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளராக  தொடர்ந்து நீடிப்பேன்” என திருப்பூர் துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.


பிரச்னை என்ன?


அண்மையில் வைகோவிற்கு அவர் எழுதிய கடிதத்தில் “ மதிமுக தொடங்கியபோது வாரிசு அரசியலுக்கு எதிரான வைகோவின் உணர்ச்சி பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தார்கள். ஆனால் அண்மை காலமாக அவரின் குழப்பமான செயல்பாடுகள் காரணத்தினால் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டார்கள் . கட்சியில் மகனை அரவணைப்பதும் தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது.


வைகோ இதை உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரின் பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால், மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது” என்று குறிப்பிட்டு இருந்தார்.


மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் முடிவை மறுத்த வைகோ, திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை அலட்சியப்படுத்துவதாக கூறினார். மதிமுக தொண்டர்கள் எண்ணம் அதுவல்ல என்பதை தெளிவுபடுத்தினார். இதைத் தொடர்ந்து திருப்பூர் துரைசாமியை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி வைகோவை கட்சியினர் வலியுறுத்த தொடங்கினர்.  இந்நிலையில் கடந்த மாதம் திருப்பூர் துரைசாமி செய்தியாளர்களை சந்தித்துபோது, பொது வாழ்க்கையில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார்.  அதைதொடர்ந்து, மதிமுகவில் இருந்து முற்றிலும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.