திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை அமைந்துள்ளது.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் திருப்பத்தூர் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், கல்லூரி மாணவ மாணவிகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர் .
இந்நிலையில் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பறையை தனியாருக்கு நகராட்சி நிர்வாகம் ஏலம் விட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம், சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய், மலம் கழிக்க, 3 ரூபாய் என கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையில் சிறுநீர் கழிக்க 5 ரூபாயும், மலம் கழிக்க 10 ரூபாயும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
இந்த கட்டணக் கழிப்பறையை சரிவர சுத்தம் செய்வதில்லை கதவு அனைத்தும் உடைந்த நிலையிலும் துர்நாற்றம் வீசும் அவல நிலையில் உள்ளது. ஆனால் நகராட்சி நிர்வாகம் இதையெல்லாம் கண்டும் காணாமல் மெத்தனை போக்காக செயல்படுகிறது.
மேலும் நகராட்சிக்கு சொந்தமான சிறுநீர் கழிக்கும் பொது கழிவறையை கூட பூட்டி வைத்துள்ள நகராட்சி நிர்வாகம். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை நலன் கருதி நகராட்சி நிர்வாகம் மீதும் ஒப்பந்ததாரர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.