திருப்பத்தூரில் தனியார் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பள்ளியின் காவலரை தாக்கிவிட்டு சிறுத்தை ஊருக்குள் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியினை வனத்துறையினர் ஈடுபட்டனர்.
கார் ஷெட்டிற்குள் சிறுத்தை:
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறுத்தை புகுந்த நிலையில், அங்கிருந்து சிறுத்தையானது தப்பித்து, அருகில் உள்ள கார் ஷெட்டிற்குள் நுழைந்தது.
இதனால் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். முதலில் சிறுத்தை வீட்டிக்குள் புகுந்ததாகவும் பின்னர், அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்தில் தாவியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த வாட்ச்மேன் கோபால் என்பவரின் தலையை சிறுத்தை தாக்கியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுத்தை நுழைந்த கார் செட்டிற்குள், அங்கிருந்த 2 காருக்குள் 5 பேர் மாட்டிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சிறுத்தையானது, ஆந்திராவின் எல்லைப் பகுதியில் இருந்து வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
”பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை”
இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறுகையில் ”சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதை கண்டறிந்து மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் பள்ளியில் சிறுத்தை நடைமாட்டம் இருப்பதாக அறிந்து பள்ளி மாணவர்களை பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.
மேலும் சிறுத்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டு சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டறிந்தோம். மேலும் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் வலைகளையும் கூண்டுகளையும் வைத்துள்ளோம் இதன் காரணமாக பொதுமக்கள் எவரும் அச்சப்பட தேவையில்லை . எனவே பொதுமக்கள் அனைவரும் சிறுத்தை பிடிக்கும் வரை ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனவும் மாவட்ட வனத்துறை அலுவலர் மகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
மூன்று குழுக்கள் அமைப்பு:
மேலும் சிறுத்தை பிடிக்க ஓசூரில் இருந்து மூன்று குழுக்களும் சேலத்தில் இருந்து மூன்று குழுக்களும் திருப்பத்தியில் இருந்து ஐந்து குழுக்களும் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவினர் சிறுத்தை பிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இன்னும் சிறிது நேரத்தில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என மாவட்ட வனத்துறை அலுவலர் மகேந்திரன் செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.