திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் மூன்றாம் படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரியும் வீரப்பன் இன்று திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அந்த புகார் மனுவில் , நேற்று திருப்பத்தூர் நகர் பகுதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் நான் ஜின்னா சாலையில் பாதுகாப்பு பணியில் பணியமரத்தப்பட்டிருந்தேன். அப்போது ஆம்பூர் டிராபிக் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி என்பவர் என்னையும் மற்றொரு காவலரான கலைவாணனையும் என்பவரையும் அழைத்தார்.
அவர் அருகே செல்லும் போது ஒரு முதியவர் திடீரென இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரை தடுத்து நிறுத்தினோம், அவர் உடனடியாக வந்த வழியாகவே திரும்பி செல்ல வண்டியை திருப்பினார், இதனை அறிந்த டிராபிக் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி கோபப்பட்டு எனது வலது பக்கம் முதுகில் ஓங்கி பளார் என அறைந்தார்.
அதற்கு என்னை ஏன் அடித்தீர்கள்? நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டபோது, அவர் நீ என்னை தகாத வார்த்தையில் திட்டினார், ஸ்பெஷல் ரிப்போர்ட் கொடுத்து விடுவேன் என தகாத வார்த்தையை சொல்லி திட்டினார். இந்தச் சம்பவம் அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் நடந்ததால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
இதையடுத்து, டிராபிக் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலர் புகார் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.