சென்னை காட்டுப்பள்ளி முதல் பூஞ்சேரி வரை 10 வழி சாலைகள் அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னை வெளிவட்ட சாலைகள்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் வெளிவட்ட சாலைகள் அமைக்கப்பட்டு, தீர்வு காணும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, கிண்டி - மணலி 100 அடி சாலை, இரும்புலியூர் - புழல் வெளிவட்டச் சாலை பயன்பாட்டில் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்து வருகின்றன.
விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளிவட்டச் சாலைகளிலும் கடும் போக்குவரத்து ஏற்படுகின்றன. எனவே சரக்கு வாகனங்கள் துறைமுகத்திற்கு செல்ல மிகப்பெரிய அளவில், வெளிவட்ட சாலை அமைக்க அரசு சார்பில் திட்டம் போடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக , மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி முதல் மீஞ்சூர் வரை சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை எல்லைச்சாலை
தற்போது இந்த திட்டம் பூஞ்சேரி முதல் காட்டுப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டு "சென்னை எல்லைச்சாலை" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை அமைக்கும் பணி 5 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட பணிகள் துவங்கப்பட்டு, வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் முடிக்க அரசு தயாராக வருகிறது.
சாலையின் சிறப்பம்சங்கள் ?
இந்தச் சாலை 10 வழி சாலையாக அமைய உள்ளது. காட்டுப்பள்ளி முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை சுமார் 132 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. அந்த சாலையின், அகலம் 196 அடியாக அமைய உள்ளது. 6 சாலைகள் வழியாக கனரக வாகனங்களும் , மீதமுள்ள 4 சாலைகள் வழியாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கான அமைய உள்ளது.
விபத்துக்கள் அதிக அளவு ஏற்படாமல் இருக்கும் வகையில், இருபுறமும் தலா இரண்டு என நான்கு சர்வீஸ் சாலைகள் அமைய உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 50 ஆயிரம் வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்லும் வகையில், சாலை அமைக்கப்பட உள்ளது. பத்துவழிச் சாலை ஐந்து கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது. இந்த 132 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பட உள்ள சாலையில், ஐந்து இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன.
திட்ட மதிப்பீடு என்ன ?
எண்ணூர் துறைமுக முதல் தச்சூர் வரை அமைய உள்ள சாலை சுமார் 2673 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை மற்றும் திருவள்ளூர் புறவழி சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை அமைய உள்ள பகுதிக்கு சுமார் 4899 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. சிங்கப்பெருமாள் கோவில் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை சுமார் 2784 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை சாலை அமைப்பதற்கான திட்டம் மதிப்பீடுகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பெருமளவில் வளைவுகள் இல்லாமல் இந்த சாலை அமைக்கப்பட உள்ளதால், பயணம் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நெடுஞ்சாலைகள்
இச்சாலை சென்னை கிழக்கு கடற்கரை சாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆகிய சாலைகளுக்கு இணைப்பாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது .