திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் சா. ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “ திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி கழக உறுப்பினர் சா.ஞானதிரவியம், கழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமைக் கழகத்திற்கு புகார் வரப்பெற்றுள்ளதால்.


அவரது இச்செயல் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த அவரது விளக்கத்தினையும் செயல் பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டுமெனவும், அப்படி தெரிவிக்க தவறும் பட்சத்தில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்பி ஞான திரவியம் மற்றும் செயலாளர் ஜெயசிங் மற்றும் சொத்து நிர்வாக அதிகாரி மூன்றடைப்பு ஜான், ஆடிட்டர் மைக்கேல் உட்பட 33 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்  பதிவு செய்யப்பட்டுள்ளது. 


நெல்லை திருமண்டல சிஎஸ்ஐ டயோசீசன் அலுவலக வளாகத்தில் நேற்று இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பிஷப்பின் ஆதரவாளர் மத போதகர் காட்பிரே நோபிள் என்பவர். திமுக எம்பி ஞானதிரவியம் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். மத போதகர் கார்பரே நோபில் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் திமுக எம்பி ஞான திரவியம் மீது 147, 294 b, 323, 109, 506( 1) என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம், கடலூர் மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய திமுக கவுன்சிலருக்கு எதிராக அக்கட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கவுன்சிலருக்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,  அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.