தனி மனிதனைவிட இயக்கம் பெரிது என நினைப்பவன், என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது என எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.


இரு தரப்பினர் மோதல்:


திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்க உள்ள திட்ட பணிகளையும், முடிவுற்ற  திட்ட பணிகளையும்  தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.  இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ். பி. ஐ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தையும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு  குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.


விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் எம்.பி., சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீடு உள் நியூ ராஜா காலனி வழியாக, அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றனர்.


எம்பி சிவாவின் பெயர் இடம்பெறாதது, அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அதனால், அமைச்சர்  மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டியுள்ளனர்.


அப்போது, அமைச்சரும் அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்றுவிட்டதாக தெரிகிறது.  விளையாட்டு  அரங்கம் திறப்பு  விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்.பி.  சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மட்டும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.




இயக்கம் பெரிது:


இச்சம்பவம் தொடர்பாக பேசிய திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரேன் சென்று இருந்தேன்.


நடந்த செய்திகளை, ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.


இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன், அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை, யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை.


நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான  கட்சிக்காரன், தனி மனிதனை விட இயக்கம் பெரிது கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான். இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டு உள்ளார்.


நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. மன சோர்வில் உள்ளேன். மனசு சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. மேலும் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை எனவும் எம்.பி திருச்சி சிவா தெரிவித்தார்.