சட்டப்பேரவையில் இன்றைய தினம் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என்றும், 3 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். மேலும் தொழில் வளர்ச்சிக்காக பின் தங்கியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தருமபுரி, நாமக்கல், விழுப்புரம், நெல்லை, விருதுநகர், சிவகங்கை, தேனி, நாகையில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் வெளியான உணவு பதப்படுத்தும் பூங்கா :
கடந்த அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் 2018-19ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோதும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெளகுப்பத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து நபார்டு வங்கியின் உதவியோடு 450 ஏக்கர் பரப்பளவில், ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமானது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திண்டிவனத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் உணவு பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் இன்று வெளியான தமிழக அரசு பட்ஜெட்டில் திண்டிவனத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உணவு படுத்துக்கொள்ளும் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவிப்பாக இருந்த திண்டிவனம் உணவு பதப்படுத்தும் பூங்காவானது நடப்பு பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் இதுவரி எந்த பணிகளும் முறையாக நடைபெறாமலேயே உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அரசின் ஏட்டில் உள்ள அறிவிப்புகள் நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகும் என்பதற்கு உதாரணமாக உணவுப்பூங்கா குறித்த அறிவிப்பு உள்ளதாக கூறும் பொதுமக்கள், இந்த அரசாவது அதனை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.