விழுப்புரம்:  2006ஆம் ஆண்டு நடந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உறவினர் கொலை வழக்கில் திண்டிவனம் நீதிமன்றத்தில் சிவி சண்முகம், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகி 2 மணி நேரம் சாட்சியம்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக சி.வி.சண்முகமும், அண்மையில் பாமகவிலிருந்து நீக்கப்பட்ட கருணாநிதியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு 8.5.2006 ம் தேதி நடந்தது. அன்று மாலை சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள தனது வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்.


அதிமுக தொண்டர் வெட்டி படுகொலை 


அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றது. ஆனால் அவர், அங்கு நின்ற காருக்குள் புகுந்து உயிர் தப்பினார். கொலை செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை அந்த கும்பல் வெட்டி கொன்றது.


காவல் நிலையத்தில் புகார் 


இதுகுறித்து சி வி சண்முகம் ரோஷணை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன், ரகு, குமரன் உள்ளிட்ட பா.ம.க.வை சேர்ந்த 21 பேரை குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன் ஆகிய 6 பேரின் பெயரை நீக்கி விட்டு, ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 15 பேர் மீது மட்டும் ரோஷணை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.


சிவி சண்முகம் மற்றும் சிவி ராதாகிருஷ்ணன் ஆஜர்- 2 மணி நேரம் சாட்சியம் 


இதனை தொடர்ந்து இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபாருக் முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி சண்முகம், அவரது சகோதரர் சி.வி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி 2 மணி நேரத்திற்கு மேலாக சாட்சியம் அளித்தனர். இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை வருகின்ற 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.