கோடை வெயிலின் உக்கிரம் தணிக்க மெரினா கடற்கரை வரும் மக்களை நேர கட்டுப்பாட்டை காரணம் காட்டி காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என  சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோடை வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டி உக்கிரம் காட்டும் நிலையில், வெப்பம் தணிக்க மக்களுக்கு கடவுள் கொடுத்த கொடையாக உள்ள மெரினா கடற்கரையில் குழுமுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.


ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்க கூடாது எனக் கூறி காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்துவதாகவும், காங்கிரீட் காடாகிப் போன சென்னை நகரத்தில், உயர்ந்த கட்டிடங்களால்  வெப்பத்தின் அளவு பல மடங்கு அதிகரிப்பதுடன், தென்றல் காற்று நகருக்குள் வீச முடியாத நிலையும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


கடைகள், ஹோட்டல்கள் 24 மணி நேரமும் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாற அனுமதித்துள்ள அரசு, வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


கடற்கரைக்கு வரும் மக்கள் இரவு 10 மணிக்கு மேலும்  அனுமதிக்கவும், அவர்களை துன்புறுத்த கூடாது என காவல் துறையினருக்கு அறிவுறுத்தவும் கேட்டு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, மெரினா செல்பவர்களை காவல் துறையினர் எப்படி துன்புறுத்துகின்றனர்? என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.


சென்னை மெரினா கடற்கரை நல்ல பொழுது போக்கு இடமாக உள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள் என எப்போதும் ஏராளமான கூட்டம் மெரினா கடற்கரையில் காணப்படும். தற்போது வெயில் காலம் என்பதால் மெரினா கடற்கரைக்கு செல்ல மக்கள் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளதால் மாலை வேளைகளில் பெற்றோர் பொழுதை கழிக்க தங்கள் குழந்தைகள் உடன் மெரினா கடற்கரையில் தஞ்சம் அடைகின்றனர். 


மேலும் படிக்க 


TN Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு... எங்கெல்லாம்?


EPS Case: எடப்பாடி பழனிசாமி மீதான விசாரணை அறிக்கை - மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல்