பொதுவாகவே புதுச்சேரி என்றாலே மலிவு விலை மதுபானங்களுடனேயே ஒப்பிட்டுப் பார்க்கும் நிலை உள்ளது. மது விருந்துகளுக்காகவே ஆண்கள் புதுச்சேரி செல்வார்கள் என்ற பரவலான பொதுவான எண்ணமும் உள்ளது. ஆனால், ஊர் சுற்றும் ஆசை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் புதுச்சேரிக்கு விசிட் அடிக்கலாம். தமிழ் சினிமாவிற்கும் புதுச்சேரிக்கும் பெரிய தொடர்பு உண்டு. நிறைய பாடல்கள் அங்கு காட்சிப்படுத்தப்படுவது வழக்கம்.
1953 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி பிரெஞ்சு காலனியாகத்தான் இருந்தது. 1954ல் அங்கு பிரான்ஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனாலும் இன்றளவும் அங்கு பிரஞ்சு கலாச்சாரம் ஆங்காங்கே மிளிர்கிறது. புதுச்சேரியில் 4 மாவட்டங்கள் உள்ளன. நான்குமே சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உகந்தது. ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின், நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன.
புதுச்சேரியில் தங்கி சுத்திப்பார்க்கலாம். அங்கு தங்குவதாக முடிவு செய்துவிட்டால் ஏசி அறை முன்பதிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் புதுச்சேரியில் பெரும்பாலான மாதங்கள் வெயில் வாட்டுவதாகவே இருக்கும்.
புதுச்சேரியின் நகரமைப்பு பிரான்சிய வலைமுறை வடிவமைப்பும் செக்டர்களையும் ஒன்றையொன்றை வெட்டும் சாலைகளையும் கொண்டுள்ளது. நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: பிரெஞ்சுப் பகுதி (வில்ல் பிளாஞ்ச்சே அல்லது 'வெள்ளையர் நகர்') மற்றும் இந்தியப் பகுதி (வில்ல் நோய்ர் அல்லது 'கறுப்பர் நகர்'.) பல சாலைகள் இன்றும் தங்கள் பிரெஞ்சுப் பெயர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளன; பிரெஞ்சு பாணியிலான மாளிகைகளையும் காணலாம்.
விதவிதமான உணவுகள்:
புதுச்சேரியில் விதவிதமான உணவுகள் கிடைக்கும். இங்கே தென்னிந்திய உணவு தொடங்கி கான்டினென்டல் உணவு வரை எல்லாமே கிடைக்கும். பிரெஞ்சு, இத்தாலியன் உணவுகள் அதிகமாகக் கிடைக்கும்.
புதுச்சேரிக்கு செல்ல சரியான காலம் எது?
புதுச்சேரிக்கு குளிர் காலத்தில் செல்வதுதான் உகந்தது. அங்கு வாடகை மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கும். அவற்றை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றலாம். ரூ.40 முதல் ரூ.200 வரை நாள் வாடகைக்கு பைக்குகள் கிடைக்கின்றன. ஸ்கூபா டைவிங் செல்லலாம், ஸீ சர்ஃபிங் செல்லலாம்.
புதுச்சேரியில் அரிக்கமேடு, அரவிந்தர் ஆசிரமம், பாரதி பூங்கா, பொடானிகல் கார்டன், கோயில்கள், பாரதி அருங்காட்சியகம் என நிறைய இடங்கள் பார்க்கவேண்டிய இடங்களாக உள்ளன.
அரிக்கமேடு என்பது தொல்லியல் துறையினரால் அகழாய்வு நடத்தப்படும் இடம். இங்கு ரோமானிய கால வணிக முறை சாட்சியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி வரும் பலரும் அரவிந்தர் ஆசிரமத்திற்குச் செல்லாமல் செல்வதில்லை. அங்கு அரவிந்தர், அன்னை வாழ்ந்த வீடும் அவர்களின் நினைவிடமும் அமைந்துள்ளது. இது ஆரோவிலில் அமைந்துள்ளது.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பாரதி பூங்கா ஒரு சிறந்த இடமாக உள்ளது. இது குழந்தைகளுடன் செலவிட ஒரு சிறந்த இடமாக அறியப்படுகிறது. அதேபோல், பொடானிகல் கார்டனும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலமாக உள்ளது.
இவை தவிர ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் செல்லலாம். வரதராஜ பெருமாள் கோயில், கன்னிகா பரமேஸ்வரி ஆலையம் ஆகியன உள்ளன.
ஆகையால் புதுச்சேரி செல்வோர் இந்த இடங்களை தவறாமல் பார்க்க வேண்டியது அவசியம்.