தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது பொதுப்போத்துவரத்து வசதிகளைப் பயன்படுத்தும் பலராலும் தொடர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இதுகுறித்து தங்கள் பாராட்டுகளைப் பலரும் தங்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 


தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அளிக்கப்பட்டிருப்பது பெண்கள் அதிகளவில் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழக அரசு இந்தத் திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, தினமும் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, போக்குவரத்துக் கழகத்திற்குப் போதுமான மானியத்தை அளிப்பது இந்தத் திட்டத்தின் நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உதவும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.



கடந்த மே 7 அன்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது, தினமும் பணிக்கும், கல்வி பெறுவதற்கும் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களைக் கணக்கில் கொண்டு மாநிலம் முழுவதும் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை அறிவித்தார். பணி, கல்வி முதலானவை மட்டுமின்றி, இந்தத் திட்டத்தால் அனைத்து பெண்களும் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம் வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதும், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதும் ஆகும். ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாகப் பயணிக்கலாம் என்பதால், தினமும் பயணிக்கும் பெண்களுக்கு அதிகளவிலான சலுகைகளைத் தரும் திட்டமாக இது கருதப்படுகிறது. 


இந்தத் திட்டத்திற்காக மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு சுமார் 1200 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் சுமார் 3000 கோடி ரூபாய் வருவாயை டிக்கெட் விற்பனையில் மூலம் பெற்று வந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்குவது மூலம், தமிழக அரசு பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதில் 40 சதவிகிதம் பேர் பெண்கள் எனக் கணக்கிட்டுள்ளது. 






இந்தத் திட்டத்தைப் பலரும் பாராட்டி வரும் வேளையில், ட்விட்டரில் தைரோகேர் (Thyrocare) என்ற மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.வேலுமணி தனது பால்ய காலங்களை நினைவுபடுத்திப் பாராட்டியுள்ளார். அவர் தனது பதிவில், `6 கிலோமீட்டர் தொலைவு. 1975-ஆம் ஆண்டு டிக்கெட் கட்டணம் செலுத்த முடியாததால் என் அம்மா நடந்து சென்றார். இது இப்போது 6 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவசமாகவும் வழங்கப்படுகிறது. நன்றி மு.க.ஸ்டாலின்’ எனப் பதிவிட்டுள்ளார்.



கடந்த அதிமுக ஆட்சியிலும், வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக, ஆண்டு வருமானமாக குறிப்பிட்ட தொகைக்குக் கீழ் சம்பளம் பெற்று வரும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக மானியம் வழங்கப்பட்டது. எனினும் இந்தத் திட்டம் தனிநபர் போக்குவரத்தை ஊக்குவிப்பதால் சாலை நெரிசல் ஏற்படும் எனவும், சுற்றுச்சூழல் மாசுக்கு வழிவகுக்கும் எனவும் இதன்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 


எனவே, முன்னாள் தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்தை தனித்தனி நபர்களாக ஊக்குவித்தது. தற்போதைய அரசு அதனைப்பொதுவாக மாற்றி, ஏற்கனவே அரசு அளிக்கும் பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை ஊக்குவித்துள்ளது. இதனால் பலரும் நேரடியாகப் பலன் பெற்று வருவதால், இந்தத் திட்டம் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.