ஹரியாணாவைச் சேர்ந்த கொள்ளையர்கள், நாடு முழுவதும் பல்வேறு ஏடிஎம்களில் கொள்ளையடித்த நிலையில், கொள்ளை அடித்தது குறித்த பின்னணி குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களை அவர்கள் அதிகம் குறிவைத்துள்ளனர். அவற்றைக் கண்டுபிடிக்க கூகுள் மேப்பைப் பயன்படுத்தி உள்ளனர்.
திருச்சூரில் திருடிய பணத்துடன் ஏடிஎம் கொள்ளையர்கள் 7 பேர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பிடிபட்ட நிலையில், கொள்ளையர்களைப் பிடித்தது குறித்தும் கொள்ளை நடந்தது பற்றியும் சேலம் டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார். இதன்படி கொள்ளையர்கள் தெரிவித்து உள்ளதாவது:
திருச்சூரில் அதிகாலையில் பணம் கொள்ளை
கேரள மாநிலம் திருச்சூரில் மப்ரணம், கொலாழி, ஷோரனூர் ஆகிய 3 பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணி முதல் 4 மணி வரை கொள்ளை நடந்தது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
சிசிடிவி கேமரா மீது ஸ்ப்ரே அடித்து அவற்றை செயலிழக்கச் செய்துள்ளனர். தொடர்ந்து கேஸ் கட்டர்களைப் பயன்படுத்தி, எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தைச் சேதப்படுத்தி உள்ளனர். இதில் 3 ஏடிஎம்களிலும் சேர்த்து, ரூ.65 லட்சம் மதிப்பிலான பணத்தைக் கொள்ளையடித்தனர்.
ஏன் எஸ்பிஐ ஏடிஎம்?
பணம் அதிகமாக இருக்கும் என்பதால், எஸ்பிஐ ஏடிஎம்களுக்கு குறி வைத்துள்ளனர். கூகுள் மேப்பில் ஏடிஎம்களின் இருப்பிடங்களைப் பார்த்து, நோட்டமிட்டு, கொள்ளை அடித்துள்ளனர். டெல்லியில் இருந்து சரக்கு ஏற்றி வந்ததுபோல் வந்து, இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
கொள்ளைக்கு வெள்ளை நிற கிரெட்டா காரைப் பயன்படுத்திய கொள்ளையர்கள், பணத்தை அடித்து அதே காரில் தப்பிச் சென்றனர். பாதுகாப்பான இடத்துக்குச் சென்றதும், கண்டெய்னர் லாரி ஒன்றில் பணம், காரை மறைத்துள்ளனர்.
ALSO READ | Thrissur ATM Theft: கற்களை வீசிய போலீஸ்; உடைந்த கண்ணாடி.. சீறிய கண்டைனர் லாரி.. விறுவிறு சேஸிங்!
சுங்கச் சாவடிகளில் மண்ணைத் தூவிய கொள்ளையர்கள்
தொடர்ந்து பாலக்காடு உள்ளிட்ட கேரளாவின் 2 சுங்கச் சாவடிகள் வழியாகக் கொள்ளையர்கள் தப்பித்து வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்குள் நுழைந்த அவர்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் வந்தபோது தமிழக காவல் துறையினரிடம் பிடிபட்டனர்.