டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, "பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லி வந்தேன். இன்று காலை பிரதமரை சந்தித்துள்ளோம். இந்த சந்திப்பு இனிய சந்திப்பாக நடைபெற்றுள்ளது. பிரதமர் மகிழ்ச்சியுடன் என்னுடன் பேசினார்.


பிரதமரின் கையில் உள்ளது:


இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று 3 கோரிக்கைகளை அனுப்பியுள்ளேன். அதன் சாரம்சங்களை முழுமையாக தெளிவாக எழுதி அவரிடம் ஒப்படைத்துள்ளேன்.


முதலில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகளை இணைந்து செயல்படுத்தியது போலவே, இரண்டாவது கட்ட பணிகளையும் இணைந்து செயல்படுத்தனும் என்பது எங்களது நிலைப்பாடு. இரண்டாவது கட்ட பணிகளை காலதாமதம் இன்றி மேற்கொள்ள 2019ம் ஆண்டு மாநில அரசு நிதியில் இருந்து கடன் பெற்று பணிகள் தொடங்கி பின்னர் ஒன்றிய அரசின் நிதியுடன் இணைந்து செயல்படுத்தும் திட்டமாக செயல்படுத்தும் விதமாக ஒப்புதல் பெறப்பட்டது.


மெட்ரோ திட்டத்திற்கான நிதி:


ஒன்றிய உள்துறை அமைச்சர் இதை ஏற்றுக்கொண்டு 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது. ஒன்றிய நிதியமைச்சர் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று 2021ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிவித்தார். இதையடுத்து, ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை 2021ம் ஆண்டே வழங்கியது.


இந்த பணிகளுக்கு 18 ஆயிரத்து 574 கோடி செலவிடப்பட்டு இருந்தாலும், ஒன்றிய அரசின் ஒப்புதல் வழங்காத காரணத்தால் ஒன்றிய அரசின் நிதி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் பணிகள் தாமதப்பட்டிருக்கிறது. தாமதம் இன்றி இந்த நிதியை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


கையெழுத்துப் போடாததால் நிதி தர மறுப்பு:


ஒன்றிய அரசு 60 சதவீத நிதியும், தமிழ்நாடு அரசு 40 சதவீத நிதியும் ஒருங்கிணைந்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டின் கீழ் ஒன்றிய அரசு வழங்க வேண்டியது 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய். இந்த தொகையில் முதல் தவணை இதுவரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை.


இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கையெழுத்து இடாததே இதற்கு காரணம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது, காலை உணவுத் திட்டம் போல தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களில் செயல்படுத்தாத பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒப்புக்கொள்ளவில்லை.


எந்த மாநிலத்தின் மீது மொழி திணிப்பு இருக்காது என்று ஒன்றிய அரசு உறுதிமொழி அளித்தாலும், இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்த ஷரத்து இல்லை. இந்த ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் சொல்லியிருக்கிறோம்.  இந்த சூழலில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடாததை காரணம் காட்டி ஒன்றிய அரசு நிதியை ஒதுக்கிடாததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல், மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் சூழலை சுட்டிக்காட்டியுள்ளோம்.  இதனால், ஒன்றிய அரசு உடனே நிதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறியிருக்கிறோம்.


தமிழக மீனவர்கள் விவகாரம்:


தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்துள்ள பிரச்சினைகளை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். நம் பாரம்பரிய மீன்பிடிப்பு முறையில் மீன்பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் துன்புறுத்துகிறார்கள். இதுதொடர்பாக பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் பல முறை வலியுறுத்தியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் மிக அதிகளவில் இந்த சம்பவங்கள் நடக்கிறது. 191 மீன்பிடி படகுகளும், 145 மீனவர்களும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக நமது ஒன்றிய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும், மீன்பிடி கருவிகளையும் மீட்டுத்தருமாறு கேட்டுக்கொண்டேன்


அடுத்த மாதம் இலங்கை கொழும்புவில் நடைபெற இந்திய – இலங்கை கூட்டுக்குழு விவாதத்தில் இதுகுறித்து விவாதித்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளது. புதிய அதிபர்கிட்ட இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதை கவனமாக கேட்டுக் கொண்ட பிரதமர் இதுபற்றி விரிவாக கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளார்.


பிரதமர் மீது நம்பிக்கை:


தமிழ்நாட்டு மக்களின் நலனை காக்க இந்த கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டிற்கு ஏராளமான கோரிக்கைகள் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு ஏராளமான கோரிக்கைகள் இருக்கிறது. அதைத்தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த 3 கோரிக்கைகளை மையப்படுத்திதான் இந்த சந்திப்பு நடந்தது.


மோடி என்னை பிரதமராகச் சந்தித்தார். நான் முதலமைச்சராக அவரைச் சந்தித்தேன். அனைத்து கோரிக்கைகளையும் அவர் பொறுமையாக கேட்டார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. செந்தில் பாலாஜி துணிச்சலுடன் போராடி வந்துள்ளார். நிச்சயமாக எதிர்காலத்தில் அவர் நீதிமன்றத்தில் விடுதலை பெறுவார் என்று நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்கள் கோரிக்கைகளை எப்போதும் விட்டுத்தர மாட்டோம். அதில் உறுதியாக உள்ளோம்.“


இவ்வாறு அவர் பேசினார்.