விழுப்புரம் : மதுபாட்டில்கள் கடத்திச் சென்ற நபர் மீது வழக்கு பதியாமல் இருக்க, பணம் வாங்கிகொண்டு விடுவித்த மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டுகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நடவடிக்கை.


விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டுகளாக பணியாற்றி வரும் அழகப்பன், காமராஜ் மற்றும் செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலைய ஏட்டு மாதவன் ஆகியோர், கடந்த சில தினங்களுக்கு முன், கண்டமங்கலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.


இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு! அதிமுக பலவீனத்தை காட்டுகிறது.. திருமா தாக்கு


அப்போது, பைக்கில் வந்த, வேலுார் மாவட்டம், ஆரணியை சேர்ந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் 10 மதுபாட்டில்களை வைத்திருந்ததால், சட்டப்படி வழக்குப் பதிந்து கைது செய்யப் போவதாக போலீசார் கூறினர். அந்த நபர், தனது நண்பர்களுக்கு கொடுப்பதற்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதாக கூறியுள்ளார்.


இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, அவரிடம் போலீசார் பேரம் பேசி ரூ.4,500 பணத்தையும், மதுபாட்டில்களையும் வாங்கியுள்ளனர். மேலும், கூடுதலாக பணம் தர மறுத்தால் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டி உள்ளனர். தன்னிடம் வேறு பணம் இல்லை என்று கூறியதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல், போலீசார் அனுப்பி விட்டனர்.


இதையும் படிங்க: அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!


இது குறித்த தகவல், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸ் ஏட்டுகள் அழகப்பன், காமராஜ், மாதவன் ஆகிய மூன்று பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கையாக, 'சஸ்பெண்ட்' செய்து காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.


புதுச்சேரியில் இருந்து காரில் கடத்திய ரூ. 70 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்


புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு காரில் கடத்தி வந்த ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கலால் போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். கோட்டக்குப்பம் மதுவிலக்க அமலாக்க பிரிவு போலீசார் காலை புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், மொரட்டாண்டி சுங்கசாவடி பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.


அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற இனோவா காரை நிறுத்தி சோதனை செய்ததில், 30 அட்டை பெட்டிகளில் 720 டின் பீர் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரமாகும். புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.