தஞ்சாவூர்: பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர் அலுவலகத்தில் கணினியில் பணியாற்றிய விவகாரத்தில் 3 அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் அலுவலகத்தில் அதே இருக்கையில் அமர்ந்து பணியாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். விசாரணைக்குப் பிறகு, வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) உள்பட மூன்று அதிகாரிகள் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி இயக்குநராக பணியாற்றி வந்த ஒருவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட கலெக்டர் இரா. ரேவதி கடந்த ஜூலை 6-ஆம் தேதி அந்த பணியாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, அந்த காலிப் பணியிடத்தில் தற்காலிகமாக பெண் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டார்.

Continues below advertisement

இந்நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த நபர் கடந்த ஜூலை 25ம் தேதி மீண்டும் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து, தாம் முன்பு அமர்ந்து பணியாற்றிய அதே இருக்கையில் அமர்ந்து கணினியில் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை நேரில் கண்ட சத்துணவு பிரிவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், "பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் எப்படி மீண்டும் அலுவலகத்தில் பணியாற்றுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த சக ஊழியர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக வைரலானது. ஏற்கனவே இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி, பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசு அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் அதே இருக்கையில் அமர்ந்து பணியாற்றிய காட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், நிர்வாக நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதத்தையும் உருவாக்கியது.

இந்த சம்பவம் குறித்து அலுவலக அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் பணியில் சேரவில்லை என்றும், சத்துணவு திட்ட பணியாளர்களுக்கான ஊதிய விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் நடைமுறையை புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளருக்கு கற்றுக்கொடுத்து விளக்குவதற்காக மட்டுமே அலுவலகத்திற்கு வந்திருந்தார் என்றும் தெரிவித்தனர். இருப்பினும், அவர் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் இரா. ரேவதி நேரடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையின் அடிப்படையில் நிர்வாக ரீதியான நடவடிக்கையாக தஞ்சாவூர் வட்டார ஊராட்சி அலுவலர் (வட்டார வளர்ச்சி அலுவலர்) ந. சிவக்குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதேபோல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) வே. சித்ரா பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், உதவியாளர் ஆர். ரேவதி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் ஒழுங்கு மற்றும் நிர்வாக நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகவும் இந்த பணியிட மாற்றம் கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலான ஒரு சம்பவம், மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கவனத்திற்கு சென்று உடனடி நடவடிக்கையாக மாறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.