புலி, ஆச்சரியமும் அச்சமும் ஒருசேர தரும் விலங்கு. காடுகளுக்குள் அவ்வளவு எளிதில் புலிகள் மனிதர்கள் கண்ணில் அகப்பட்டு விடாது. ஆனால் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே டி 23 எனப் பெயரிடப்பட்ட ஒரு ஆண் புலி அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய செய்துள்ளது. அந்த புலி இதுவரை 4 மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாகவும், இது ஆட்கொல்லி புலி எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வார காலமாக புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கே காடுகளுக்குள்ளேயே எளிதாக காண முடியாத புலி ஏன் ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்குகிறது? புலி ஏன் ஆட்கொல்லியாக மாறுகிறது என்ற கேள்வி எழும். அது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.





புலிகளின் இயல்பு


புலிகள் ஆட்கொல்லியாக மாறுவதை பார்க்கும் முன்னர் புலிகளின் இயல்புகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். புலிகள் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட விலங்கு. தனக்கென ஒரு எல்லை வகுத்துக் கொண்டு தனியாக வாழும் விலங்கு. புலி இருக்கும் காடு செழிப்பான காடாக கருதப்படுகிறது. ஏனெனில் அதற்கு தேவையான இரை எங்கு கிடைக்குமோ அங்கு தான் புலி வாழும். புலி அதன் வேட்டையாடும் திறனுக்கு பெயர் பெற்றது என்றாலும், அதன் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையாது. இரைக்காக ஓடும் புலியை விட, உயிருக்காக ஓடும் மானுக்கு தேவை அதிகம் இருக்கும் அல்லவா?. ஒரு புலி மானை வேட்டையாடினால், உடனடியாக அதனை தின்றுவிடாது. சில நாட்களுக்கு வைத்து சாப்பிடும் குணம் கொண்டது. மனித வாசனையை நுகர்ந்தாலே புலி பல கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று விடும்.





ஆட்கொல்லியாக மாறுவதற்கான காரணங்கள்


இத்தகைய இயல்புகளை கொண்ட புலி, அவ்வளவு எளிதில் ஆட்கொல்லியாக மாறி விடாது என சூழலியல் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். புலிகள் ஆட்கொல்லியாக மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக புலிகள் வேட்டையாடும் தன்மை குறையும்போது, கிராமங்களில் உள்ள வளர்ப்பு பிராணிகளை தாக்கி உண்ணத் துவங்கும். அத்தகைய சமயங்களில் எதேச்சையாக மனிதர்களை புலி வேட்டையாடி உண்டால், ஆட்கொல்லியாக மாற வாய்ப்புள்ளது. ஏனெனில் மனிதர்களை புலிகள் வேட்டையாடுவது மிகவும் எளிதானது. மனித வேட்டைக்கு பழகிய புலிகள் ஆட்கொல்லியாக மாறும் என்கின்றனர், சூழலியல் செயற்பாட்டாளர்கள்.


இது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கூறுகையில், “கூடலூர் புலியை சுட்டுக்கொல்ல முடிவு எடுத்திருப்பது மிகவும் வருத்தமானது. மக்கள் ஒத்துழைப்பு இன்றி புலிகளை காப்பாற்ற முடியாது. ‘மேன் ஈட்டர்’களை காடுகளில் வைத்திருப்பது பிரச்சனைதான். இதனை சுட்டுக் கொல்வதை தவிர வேறு வழியில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. புலி, சிறுத்தை மனிதர்களை கண்டால் விலகிச்செல்லும் தன்மை கொண்டது. அவ்வளவு சீக்கிரம் மனிதர்களை வேட்டையாடாது.




புலிகள் ஆட்கொல்லியாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது முதிர்வு, உடல் ரீதியாக பாதிப்பு, நோய் தொற்று, இயலாமை, கண் பார்வை குறைவு, இளவயதில் அடிபடுதல், எல்லைகளுக்காவோ மற்ற விலங்குகளுடனோ சண்டையிட்டு காயமடைதல் உள்ளிட்ட காரணங்களால் வேட்டைத் திறன் குறையும். இரையை தேடும் வலிமை இழக்கும். அத்தகைய நிலையில் கிராமங்களில் உள்ள கால்நடை தாக்கி உண்ணும். எதேச்சையாக மனிதனை தாக்க நேரிடும். புலிகளுக்கு மனிதனை வேட்டையாடுவது தான் மிகவும் எளிமையானது. தாய்ப்புலி ஆட்கொல்லியாக இருந்தால், குட்டிகளும் ஆட்கொல்லியாக மாற வாய்ப்புள்ளது. பூங்காக்களிலும் ஆட்கொல்லி புலிகளை பராமரிப்பதில் சிக்கல் உள்ளது. சிலர் புலியை சுட்டுக்கொல்லக் கூடாது என உணர்ச்சிப்பூர்வமாக சொன்னாலும், வேறு வழியில்லை என்பதே எதார்த்தம்.


புலிகள் ஆட்கொல்லியாக மாறுவது அடிக்கடி நடப்பதில்லை. எப்போதாவது நடப்பது இயல்பான ஒன்றுதான். 90 சதவீத பகுதிகளை மனிதர்களுக்காக எடுத்துக்கொண்டு, 10 சதவீத பகுதிகளைத்தான் மற்ற உயிரினங்களுக்கு கொடுத்துள்ளோம். அங்கும் குடியேற்றங்கள் நடப்பதால்தான் பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. தவறு என்பது மனிதர்களிடம் தான் உள்ளது, புலிகளிடம் அல்ல” என அவர் தெரிவித்தார்.