மதுரையைச் சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் "கடந்த 17 ஆம் தேதி கோரிப்பாளையம் தர்கா முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக வழங்கிய தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற ரஹ்மத்துல்லா என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக பேசினார். இந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த அடிப்படையிலேயே கோரிப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த வழக்கு விசாரணைக்கும்,  நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 

இதே போல ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்ஃபீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனிஉமர்கர்த்தர், அல்டாப் உசேன் உள்ளிட்ட 7 பேரும் இதே  ஜாமின் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில்,  மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. ஆகவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில்,  மனுதாரர்கள் மீது வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. பொதுக்கூட்டத்தில் நீதிபதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக பேசியுள்ளனர். ஆகவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.




 

மன்னர் மைதீனின் கொலை வழக்கில்  2 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 

மதுரையைச் சேர்ந்த மன்னர் மைதீன் என்பவர், மதுரை இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிதாஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இவர் கடந்த 2014ல் முனிச்சாலை பகுதியில் கொடூரமாக  வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில்  இப்ராகீம்ஷா, வாழைக்காய் ரபீக், பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், விசாரணயின் போது இறந்த வாழைக்காய் ரபீக் தவிர்த்து, மற்ற இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன்,  சதீஷ்குமார் அமர்வு மதுரை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.