கரூர் வாங்கல் அருகே  கடையை சூறையாடியவர்கள் கைது


கரூர், வாங்கல் அருகே ஷவர்மா கேட்டு கொடுக்காததால், பாஸ்புட் கடையை சூறையாடிய 10 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து 9 பேரை கைது செய்துள்ளனர். கரூர் வெங்கமேடு மண்மங்கலம் சாலையில் நாவல் நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள காம்ப்ளக்ஸில் ஒரு பாஸ்புட் கடை செயல்பட்டு வருகிறது. வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கடையை நடத்தி வந்துள்ளனர்.


இந்நிலையில், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல், கோகுல்நாத் ஆகிய இருவரும் பாஸ்புட் கடைக்குச் சென்று, அங்கு சமையலில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த உட்பால் ஹோஸ் என்பவரிடம் ஷவர்மா கிடைக்குமா? என கேட்டுள்ளனர். அதற்கு இங்கு இல்லை என அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இருவரும் தனது நண்பர்களுக்கு போனில் தகவல் அளித்துள்ளனர். சிறிது நேரத்தில் இவர்களின் நண்பர்கள் 8 பேர் பாஸ்புட் கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


இந்த தகராறில் பாஸ்புட் கடைக்குள் புகுந்த இவர்கள், கடையை அடித்து நொறுக்கியதோடு, கடையில் இருந்த எல் இடி டிவி , இவர்கள் தங்கி இருந்த வீடு ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, கடை உரிமையாளர் மதுசூதன் போஸ், வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து சக்திவேல், சரண்ராஜ், மணிகண்டன், பிரித்விராஜ், சுரேந்தர், கோகுல்நாத், சுரேஷ்பாபு, ஹரிஹரன், லோகேஷ் ஆகிய 9 பேரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய சேதம் என்பவரை தேடி வருகின்றனர். பாஸ்புட் கடையில் ஷவர்மா கேட்டு, கடையை சூறையாடிய சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



வாங்கல், மாயனூர் பகுதிகளில் 184 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல்.


 கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு மற்றும் காவல் நிலைய எல்லைகளில் போலீசார் நடத்திய சோதனையில், அனுமதி இன்றி கூடுதல் விற்பனைக்காக, மதுபானங்களை பதுக்கி வைத்த 8 பேர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், தலைவர்கள் பிறந்தநாள் ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளும் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விடுமுறை நாட்களிலும், கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக, குவாட்டர் ரகங்களை மொத்தமாக வாங்கி இது போன்ற நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மதுவிலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலைய போலீசார்களும் அனுமதி இன்றி மதுபான விற்பனை செய்வது குறித்து கண்காணித்து, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில்  பசுபதிபாளையம், வாங்கல், மாயனூர் ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு மற்றும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 184 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகளை விற்பனை செய்ததாக 8 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.