தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையிலான மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.


முன்னதாக,  செப்டம்பர் 26 ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்ட மசோதாவிற்கு, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். 


அக்டோபர் ஒன்றாம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக, அக்டோபர் 7 ஆம் தேதி தகவல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது தொடர்பான மசோதா, அரசிதழில் வெளியானது. அதை தொடர்ந்து, சட்டமாக நடைமுறைக்கு வந்தது. 


இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டை தடை  செய்வதற்கான நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்ட தொடரில் நிரந்தர சட்டமாக இயற்றப்பட்டது. 


ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு என்ன தண்டனை என்பதை கீழே காணலாம்.



ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டை தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, கடந்த ஜூலை மாதம் 28 ம் தேதி தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. அதை தொடர்ந்து, அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் குறித்தும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றியும் அன்றைய தினமே அமைச்சரவை கூட்டத்தில் துறை வாரியாக விரிவாக விவாதிக்கப்பட்டது. 


71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் அதனை விளையாடுபவர்களின் திறன்கள் எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும் மாறாக அவர்களுடைய திறன்களை குறைக்கும் வேலைகளையே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் செய்கின்றன. விளையாடும் நபர்களை ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குன்றன என்றும் அதோடு அவர்களை கடனாளியாக்கும் திட்டத்துடனே அவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல், ஆன்லைன் விளையாட்டுகளால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள நீதியரசர் சந்துரு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பிரதான நோக்கம் லாபமாக இருக்கிறதே தவிர, விளையாடுபவர்களின் திறன்களை மேம்படுத்துவதாக இல்லை. அதனால், இதுபோன்ற விளையாட்டுகள், விளையாட்டுகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு கூட தகுதியற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.