செந்தில் பாலாஜி கைது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி தர வேண்டுமென்ற நோக்கத்தில் நடத்தப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். 


கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “மோடி அரசின் பாசிச போக்கை கண்டித்து இந்த பொதுக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை நள்ளிரவு வேளையில் கைது செய்துள்ளார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் செந்தில் பாலாஜி அல்ல. முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவருக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காக தான். இதன் மூலம் அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதை தடுக்க முடியும் என மோடி, அமித்ஷா கும்பல் கணக்கு போடுகிறது.


எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் பாஜக


அகில இந்திய அளவில் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டுமென ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் பாஜகவின் கனவு. அதனால் காங்கிரசை ஒவ்வொரு மாநிலமாக பலவீனப்படுத்தி வருகிறார்கள். கூட்டணியில் இருக்கும் கட்சிகளை உடைத்து வருகிறார்கள். வருமானவரித்துறை, அமலாக்கத் துறை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியை மோடி, அமித்ஷா சங்பரிவார் கும்பல் செய்து வருகிறது.


தேர்தலில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முதல் அடியை எடுத்து வைத்தவர் ஸ்டாலின். பாஜக வீழ்த்த அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், கொள்கை ரீதியாகவும் வீழ்த்த முயற்சித்து வருபவர் ஸ்டாலின். பாஜகவை எதிர்க்கும், விமர்சிக்கும் கட்சிகள் உண்டு. கொள்கை  அளவில் ஆட்சி பீடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் செயல்படுபவர் ஸ்டாலின். இதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.




ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல்வாதி போல செயல்படுகிறார். ஆளுநர் அலுவலகமா? ஆர்.எஸ்.எஸ். அலுவலகமா? செந்தில் பாலாஜியின் இரண்டு துறைகளை பகிர்ந்தளித்து பரிந்துரை செய்ததை ஆளுநர் திருப்பி அனுப்பி அனுப்புகிறார். இது ஆளுநர் செயல் அல்ல. ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் செயல். அரசாணை வெளியிட முதல்வர் தயாராகி விட்டார் என்பதால், இரண்டாவது முறையாக அனுப்பிய போது பகிர்ந்து அளித்ததை ஏற்றுக்கொள்கிறார்.


திராவிட அரசியலை அழிக்க நினைக்கிறார்கள்


அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரையும் பிடித்து போட்டாலும் கலங்க கூடியவர் ஸ்டாலின் அல்ல. திராவிட அரசியலை அழிக்க நினைக்கிறார்கள். அவரை வீழ்த்த வேண்டுமென உற்ற துணையாக இருந்த செந்தில் பாலாஜியை குறி வைத்து இருக்கிறார்கள். பாஜக ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு வீழ்த்தி காட்டியவர் செந்தில் பாலாஜி. அவரை முடக்குவதன் மூலம் ஸ்டாலினுக்கு நடுக்கம், தடுமாற்றத்தை தந்து விடலாம் என நினைக்கிறார்கள்.


எதிர்கட்சிகளை ஒரணியில் திரட்டி முதலமைச்சர் வழி நடத்தி வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு கூட்டணியை அமைக்க முடியவில்லை. கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை. அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறார். இது அவர்கள் அடி வயிற்றில் புளியை கரைக்கிறது. இது செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் அல்ல. முதல்வருக்கு வைக்கப்பட்டுள்ள செக்.


முதல்வரை நிலைகுனிய வைக்க வேண்டும். தடுமாற வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஸ்டாலின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக இருக்கிறது. இலக்கை நோக்கியதாக இருக்கிறது. சானதான சக்திகளின் குரல்வளையை நெறிக்கும் வகையில் இருக்கிறது. துணிந்து முன்னேறுங்கள். நாங்கள் உற்ற துணையாக இருப்போம். சங்கிகளை விரட்டியடிக்க காலம் கனிந்து வந்து கொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் ஸ்டாலின் மீது நம்பிக்கை உருவாகி கொண்டு இருக்கிறது. ஸ்டாலினுக்கு விசிக உற்ற துணையாக இருப்போம்” எனத் தெரிவித்தார்.