சென்னையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக மக்களிடையே கொரோனா நோய்த் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணத்தால் கிராமங்கள் முதல் மலைவாழ் மக்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெரியளவில் பெருகி இருக்கிறது.


வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை போன்ற சுற்றுலாத் தளங்களுக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். நாகை மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டபோது, மாவட்ட ஆடசியரிடம் அப்பகுதிகளில் எல்லாம் முழுவதுமாக தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளோம்.


அந்த வகையில், அங்கும் 100 சதவீதம் அளவுக்கு தடுப்பூசி முழுவதுமாக செலுத்தும் பணிகள் வேகமாக மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கருணாநிதியை தமிழகத்திற்கு தந்த அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் எனும் கிராமம் முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு அக்கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட கிராமம் என்ற நற்பெயரை காட்டூர் கிராமம் பெற்றிருக்கிறது.




இந்தியாவிலேயே காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டம், வேயாண் எனும் கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் இருக்கிற பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் எனும் கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


இந்த கிராமத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 332 நபர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 18 வயதுக்கும் கீழே 998 பேர். அதாவது கர்ப்பிணிகள் தடுப்பூசிகள் செலுத்த முடியாதவர்கள், மருத்துவ ரீதியாக தடுப்பூசி போடக்கூடாதவர்கள் தவிர 2 ஆயிரத்து 334 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.


அதேபோல், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள், சிறப்புமிக்க நினைவிடங்களில் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீலகிரி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்ற நிலையை உருவாக்க பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.




இதேபோல, முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்தாண்டு மார்ச் முதல் கடந்த மே 6-ந் தேதி வரை 1,466 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கான ஒதுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை ரூபாய் 6 கோடியே 95 லட்சம் ஆகும். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 23-ந் தேதி வரை பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 938 ஆகும். இவர்களுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறத காப்பீட்டுத் தொகை ரூபாய் 266 கோடியே 48 லட்சம் ஆகும்.


கரும்பூஞ்சை நோயாளிகளும் பயன் பெற வேண்டும் என்று, அவர்களுக்கும் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த மே 7-ந் தேதி முதல் 423 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற தொகை ரூபாய் 1 கோடியே 27 லட்சம் ஆகும். காப்பீடு திட்டத்தில் தவறிழைத்த 40 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சரியாக காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கிறார்களா? என்று நானும், துறை முதன்மை செயலாளரும் திடீரென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டோம். “


இவ்வாறு அவர் கூறினார்.