உடல் அடிக்கடி சூடாகும் ஆனால் வியர்க்காது... வலி உணர்வு இருக்காது ஆனால் காயம் ஏற்படும்...விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட 14 வயது மகனுக்காக வீட்டை அடமானம் வைத்து மருத்துவம் பார்த்து வரும் பெற்றோருக்கு உதவ அரசு முன் வருமா?

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஆணைக் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் ஹேமலதா தம்பதியினர். பிரபாகரன் சுகாதாரத் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகன் ஜெயதேவ் வயது 14. இவர் பிறந்தது முதல் இவரது உடல் அடிக்கடி சூடாகி வந்துள்ளது. இதை காய்ச்சல் என்று நினைத்து பெற்றோரும் மருத்துவரிடம் காண்பித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஜெயதேவிற்கு இரண்டு வயது இருக்கும் போது உடல் அதிகமாக அடிக்கடி சூடாக ஆரம்பித்துள்ளது. இதனால் கால் விரலில் வெடிப்பு ஏற்பட்டு கால் விரல்கள் தானாக உதிர்ந்து விழுந்துள்ளன. இதனையடுத்து அவனுக்கு ஏதோ விசித்திர நோய் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட பெற்றோர். கோயம்புத்தூர், புதுச்சேரி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  மருத்துவம் பார்த்துள்ளனர்.



 

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் நியூரோபதி அல்சர் டைப் 4 என்கிற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவனுக்கு உடல் அடிக்கடி சூடாவதால் 10 நிமிடத்திற்கு ஒருமுறை குளித்துக் கொண்டே இருப்பான் என்றும் வெளியில் சென்றாலோ இல்லை வீட்டில் இருந்தாலோ அடிக்கடி ஈர சட்டையை அணிந்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். மேலும் அவனுக்காக வீட்டில் குளிர்சாதன வசதியும் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் சிறுவனின் குதிகாலில் புண் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த புண்னின் காரணமாக கால் முழுவதும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலது காலை முட்டி அளவிற்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர். தற்போது இடது காலிலும் காயம் ஏற்பட்டு தொற்று ஏற்பட்டுள்ளதால் இடது காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாக இருப்பதால் மருத்துவர்கள் சிறுவன் உயிர் இழக்கும் ஆபத்து கூட ஏற்படலாம் என தெரிவித்துள்ளதால் பெற்றோர் தினமும் அந்த காயத்திற்கு மருந்து போட்டு கட்டு கட்டி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளித்து வருகின்றனர்.



 

தமிழகம் முழுவதும் பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சிறுவனை அழைத்துச் சென்றதால் லட்சக்கணக்கில் பணம் செலவானதாகவும் வீட்டை அடமானம் வைத்து சிறுவனுக்கு வைத்தியம் பார்த்து வருவதாகவும் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். மேலும் சிறுவனுக்கு உடல் அதிக அளவு சூடானாலும் உடலில் வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தினால் உடல் வியர்க்காது, அதேபோன்று உடலில் சுத்தமாக வலி உணர்வும் இல்லை. மேலும் அவனுக்கு அதிகமாக கோபம் வந்தால் தலையை முட்டிக் கொள்வதாகவும் நாக்கை கடித்துக் கொள்வதாகவும்  கூறுகின்றனர். இதன் காரணமாக சிறுவன் நூனி இல்லாமல் இருந்து வருகிறான். மேலும் ஏற்கனவே முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்த மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 மாதம் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் தமிழக அரசு கருணை உள்ளத்துடன் தங்களுக்கு உதவ வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர்.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண