வளரிளம் பருவத்தினரை ஊக்கப்படுத்த க்ரை அமைப்பு இன்று நடத்திய ‘பெண் குழந்தைகளுக்காக பெண் குழந்தைகளால்’ நிகழ்ச்சியில் நிஜ சிங்கப் பெண்கள் தங்களின் போராட்டக் கதைகளைப் பகிர்ந்தனர். 


தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, க்ரை என்று அழைக்கப்படும் குழந்தை உரிமைகளும் நீங்களும் (CRY) அமைப்பு சென்னை, எழும்பூரில் ‘பெண் குழந்தைகளுக்காக பெண் குழந்தைகளால்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த சந்திப்பில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் ஒன்றுகூடி தங்களின் வாழ்க்கைசார் மன உறுதி, நெகிழ்திறன் மற்றும் வெற்றிக் கதைகளை பகிர்ந்ததன் மூலம் சக பெண் தோழிகள் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு, தங்களின் கனவுகளை வென்றடைய ஊக்கப்படுத்தினர்.


பள்ளியிலிருந்து இடைவிலகல், குழந்தைத் தொழில் மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு தள்ளப்படுதல் என சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து, பிறருக்கு நம்பிக்கையளிக்கும் முன்னுதாரணமாய் வெளிப்பட்டனர்.


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரம்மதேசம் கிராமத்தில் வசிக்கும் 21 வயது இளம்பெண் எசக்கியம்மாள். 10ஆம் வகுப்பு முடித்தவுடன் வறுமை காரணமாக ஜவுளித் தொழிலில் வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டுத் திருப்பூருக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், CRY-யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் உறுப்பினர்கள், அவரின்  சூழ்நிலையை அறிந்து, அவரது பெற்றோருக்கு ஆலோசனை அளித்து,  அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்படுவதை உறுதி செய்தனர். 


டிவிஎஸ்-ல் பணி 


அவர்களின் உதவியுடன், டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். கல்வியை வெற்றிகரமாக முடித்த பிறகு, எசக்கியம்மாள் சென்னையில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணி கிடைத்தது. தற்போது அவர் ஊருக்குச் செல்லும் போதெல்லாம், தனது சமூகத்தில் உள்ள மற்ற பெண்களை உயர்கல்வியைத் தொடர ஊக்கப்படுத்துகிறார், வழிகாட்டுகிறார். 
 
“பொதுவாக பெண் குழந்தைகள் 10 அல்லது 12-ஆம் வகுப்பை முடித்த பிறகு ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதனால் பல பெண் குழந்தைகள் குழந்தை திருமணம் செய்துகொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.  இப்போது CRY-யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் வழிகாட்டுதலுடன், அப்பெண்கள் உயர் கல்விக்குச் செல்கிறார்கள், மேலும் பெண் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது” என்று எசக்கியம்மாள் கூறினார்.




17 வயதில் திருமண ஏற்பாடு


திருநெல்வேலி மாவட்டம் , தேவர்குளம் கிராமத்தில் முத்துலட்சுமி என்ற 20 வயது இளம்பெண் மற்றும் அவரது மூன்று சகோதரிகள் வசித்து வருகின்றனர். முத்துலட்சுமி இரண்டாவதாகப் பிறந்தவர். அவர் 12-ஆம் வகுப்பை முடித்தவுடன், 17 வயதாக இருந்தபோது, தினசரி கூலி வேலை செய்யும் அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.


‘மனித உரிமை களம்’ அமைப்பின் தலையீட்டால், அவரது திருமணம் தடுக்கப்பட்டது. அவர்கள், முத்துலட்சுமியின் பெற்றோருக்கு ஆலோசனை அளித்து, முத்துலட்சுமியை கல்லூரியில் சேர்த்தனர். தற்போது மானூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்துலட்சுமி இரண்டாம் ஆண்டு B.Sc கணினி அறிவியல் மாணவியாக வெற்றிகரமாக வலம் வருகின்றார்.


“நான் பள்ளி  பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவியாக விளங்கினாலும், பொருளாதார நெருக்கடி அதிகமாக இருந்தது. எனது பெற்றோர் எங்கள் அனைவருக்கும் உணவளிக்க முடியாத நிலையில் எனக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். நான் எனது கனவினை கைவிட தயாராக இல்லை. சரியான வழிகாட்டுதலால், இப்போது உயர் கல்வியில் பயில்கின்றேன். என்னைப்போன்று மற்ற பெண்களும் தங்களது கனவினை கைவிடாது முயன்று உயர் கல்வியை தொடர நான் தூண்டுகோலாக அமைவேன்” என்று முத்துலட்சுமி தெரிவித்தார்.