நாடு முழுவதும், கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று வைரஸ் மக்களிடம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவ மாணவியர்களுக்கு கல்வி தொடர் இணையதளம் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் சில மாணவர்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போனில் கேம் போன்ற செயலிகளில் மூழ்கி கிடப்பதால் , மாணவர்களுக்கு மன அழத்தம் ஏற்பட இதுவே காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க யோகாசனம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்த பெற்றோரும் முன்வர வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்தை உணர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.
அதன்படி திருவண்ணாமலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கதைகள் கொண்ட புத்தகங்கள் மற்றும் புதிய மாற்றமாக ஓவியம் மூலமாக மாற்றத்தைக் கொடுக்க தற்போது இந்த ஊரடங்கில் களமிறங்கியுள்ளனர். ஓவியத்தில் பிள்ளைகளுக்கு அதிக ஆர்வம், நிதானம், பொறுமை, புத்திக்கூர்மை, கவனம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் . அதன்படி திருவண்ணாமலையில் மாணவர்கள் சிலர் ஆன்லைன் வகுப்பு நேரத்தை முடித்து விட்டு மீதமுள்ள ஓவியம் வரைவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இது குறித்து திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலை இந்திரா நகரில் எஸ் ஆர் வி ஓவிய பயிற்சி பள்ளி நடத்தி வரும் வெங்கடேசனிடம் பேசியபோது, “மாணவர்கள், சிறுவர்கள் ,முதியவர் வரை என ஓவியத்தின் மூலம் அவர்களின் மன அழுத்தத்தை போக்க முடியும். கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க கொரோனா தோற்று பரவலை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வருகிறோம்” என்றார்.
முதலில் நாங்கள் துரிகையை பிடித்து ஓவியம் படைக்கும் வழி முறையுடன் பயிற்சியை தொடங்குகிறோம் மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு ,புகையில்லா உலகம் உள்ளிட்ட பல விழிப்புணர்வுகளை முதலில் மாணவர்களுக்கு ஓவியங்களாக கற்றுக்கொடுப்போம் அதன் வரிசையில் தற்போது கொரோனா விழிப்புணர்வும் அதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாணவர்களின் கற்பனை திறனை அதிகரிக்கும் வகையில் தொலைக்காட்சி மற்றும் அன்றாடம் ஏற்படும் நிகழ்ச்சிகள் மற்றும் வெளியில் செல்லும்போது காணப்படும் அழகான இயற்கைகள் போன்ற நிகழ்வுகளை மையப்படுத்தி, ஓவியம் வரைய அறிவுரை கூறுகிறோம் , அவர்களும் தங்களது மனதில் பதிந்த நிகழ்வுகளை வரைந்து வருகின்றனர்.
தற்போது கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தில் முகக்கவசம், தனிமனித இடைவெளி, தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்றவற்றை இடம்பெற்றுள்ளது . இதில் தடுப்பூசிக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் ஓவியம் வரைந்து வருகின்றனர். நாங்கள் ஓவிய பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு அச்சத்துடன் காணப்பட்டும் மாணவர்களின் மனநிலையை கண்டு அவர்களுக்கு ஏற்றார்போல் நடந்துகொண்டு ஓவியம் மூலம் மாற்றம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது.
மாணவர்களின் ஓவியங்களை பார்க்கும்போது கொரோனா தாக்கத்தின் நிலையை மக்கள் எளிதாக உணர்ந்து கொள்ளமுடியும். மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த ஓவிய கண்காட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, எனினும் ஊரடங்கு காலமாக ஓவிய கண்காட்சி எங்களால் நடத்தமுடியவில்லை.
ஓவிய கண்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும், இதன் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். அதேபோன்று ஓவியங்களைப் பார்த்து பாராட்டும் போது அடுத்தகட்ட ஓவியங்களுக்கு மாணவர்களும் புத்துணர்ச்சி ஏற்பட்டு அடுத்து கட்ட நிலைக்கு தயாராகுவார்கள். ஊரடங்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டபோது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது ஒரு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்பதால் விழிப்புணர்வுக்காக மாணவர்கள் தங்களது எண்ணங்களை படைப்புகளாக உருமாற்றி உயிர் கொடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.