திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் சமீபத்திய மீள் ஆய்வின் பொழுது அவ்வமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா ஆகியோர் இணைந்து சின்னக்கடைத் தெருவில் உள்ள அண்ணாமலையார் கோவிலின் உபகோவிலான துர்க்கை அம்மன் கோவிலில் உள்ள சிவன் சந்நிதியில் மூன்று கல்வெட்டும் அம்மன் சந்நிதியில் ஒரு கல்வெட்டும் என்று ஆவணம் கண்டுபிடித்தனர். மொத்தம் நான்கு கல்வெட்டுக்கள் இருப்பதைக் கண்டெடுத்துள்ளனர்
இது குறித்து மரபுசார் வரலாற்று ஆய்வாளர் ராஜ்பன்னீர் செல்வத்திடம் பேசுகையில்;
நான் மற்றும் என்னுடைய குழுவின் உதயராஜா ஆகிய நாங்கள் துர்க்கை அம்மன் கோவிலில் மூன்று கல்வெட்டுகள் ஆவணப்படுத்தாமல் இருந்ததை அறிந்து ஆவணம் செய்வதற்காகவும் மேலும் அதனை ஆய்வு செய்ததில் அம்மன் சந்நிதியில் உள்ள கல்வெட்டு குலசேகர பாண்டியன் கல்வெட்டு என்றும், சிவன் சந்நிதியின் தென்பக்க சுவற்றில் உள்ள இரண்டு கல்வெட்டும் வடக்கு பக்கம் உள்ள முப்பட்டை குமுதபட்டையில் 3 வரிகல்வெட்டு ஒன்றும் என மூன்றும் பிற்கால நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் என்பது கண்டறியப்பட்டன. இதைத் தவிர்த்து இருநூறு ஆண்டுகள் முன்னர் இந்தியத் தொல்லியல் துறை தொடங்குவதற்கு முன்னர் சர் காலின் மெக்கன்சி என்பவரால் அம்மன் கோவிலின் வடக்குப்புற சுவற்றில் குலசேகர பாண்டியனின் 36-ஆம் ஆட்சி செய்த கல்வெட்டு ஒன்று ஆவணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது,
இதில் முதல் கல்வெட்டு : இக்கல்வெட்டு பிற்கால பாண்டிய மன்னனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (கி.பி காலிங்காரயன் என்பவர் முன்னிலையில் 1268 1312) கல்வெட்டாகும். திருக்காமகோட்டமுடைய உண்ணாமுலை நாச்சியாருக்கு சீமாயசநல்லூரான சேரியந்தல் என்னும் ஊரில் ஒரு வேலி நிலம் கோயிலுக்குக் கொடையாக வழங்கிய செய்தியைக் இக்கல்வெட்டில் குறிப்பிடுகிறது.
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இக்கல்வெட்டில் வருடம் சேதமடைந்துள்ளதால் ஏற்கனவே மெக்கன்சியால் ஆவணம் செய்யப்பட்டுள்ள இதே மன்னனின் 36-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டை வைத்து இக்கல்வெட்டும் அக்காலத்தை ஒட்டியதாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. எனவே இக்கல்வெட்டின் காலம் 14-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலமாகும்.
மேலும் இவ்விரு கல்வெட்டும் மிக முக்கியமான ஒரு தகவலை நமக்குத்தருகிறது, இன்று துர்க்கை அம்மன் கோவில் என்று கூறப்படும் இக்கோயில் பாண்டியர்கள் காலத்தில் பிரதான சிவன் கோயிலாக இருந்துள்ளதை நம்மால் அறியமுடிகிறது. குலசேகர பாண்டியன் கல்வெட்டில் இங்குள்ள சிவனின் பெயர் "பாவம் தீர்த்தருளிய நாயனார்" என்றும் அம்மனை "திருக்காமகோட்டமுடைய உண்ணாமுலை நாச்சியார்" என்றும் அழகிய தமிழ்ப்பெயரில் பயின்று வருவது சிறப்புக்குரியதாகும். இன்று அப்பெயர் மருவி பாபவினாஷமூர்த்தி என்றும் மனோன்மணி என்றும் தற்போது உள்ள நடைமுறையில் உள்ளது.
இந்தச் சிவன் சன்னதி முன்பாக தனி சன்னதியில் அமைந்துள்ள துர்க்கையம்மன் சன்னதி பிற்கால நாயக்கர் காலத்திய கட்டுமானமே ஆகும். அதற்கு வலு சேர்க்கும் விதமாகச் சிவன் சன்னதியின் தென்புற சுவற்றில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நாயக்கர் காலத்திய கல்வெட்டு விடையளிக்கிறது. இருபது வரி கொண்ட ஒரு கல்வெட்டு ஆங்காங்கே சிமெண்ட் பூச்சால் சிதைவுற்று இருந்தாலும் நமக்கு அறியத் தகவலைத் தருகிறது. நந்தி பண்டிதர் என்பவரின் மகன் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் துர்க்கா பரமேஸ்வரிக்கு மஹா நவமி காலத்தில் நடக்கும் பூஜைக்கு ஆயிரம் குழி நன்செய் நிலம் தானமாகத் தந்த செய்தியைக் இந்த கல்வெட்டில் குறிப்பிடுகிறது.
மற்றொரு கல்வெட்டு இக்கோயில் மூலவரான சிவனை பாவதீத்த நாயனார் என்றும் துர்க்கை அம்மனை துர்க்கா தேவி என்ற குறிப்பிடுவதோடு, பாவதீர்த்த நாயனார்க்குத் தனியாக 500 குழி நிலமும், துர்க்கா தேவிக்கு 500 குழி நிலமும் தினசரி பூஜைக்கும் தடையின்றி விளக்கேற்றவும் தானமாகத் தந்துள்ள செய்தி குறிப்பிடுகிறது. மேலும் வடக்கு பக்கம் முப்பட்டை குமுத பட்டையில் மிகவும் தேய்ந்து காணப்படும் மற்றொரு கல்வெட்டும் இதே காலகட்டத்தில் இக்கோவிலுக்கு நிலம் கொடை தந்த செய்தியைத் தருகிறது. இம்மூன்று கல்வெட்டுகளின் எழுத்தமைதியை கொண்டு இதன் காலத்தை 17-ஆம் நூற்றாண்டு என்று கூற முடியும்.
இந்த நான்கு கல்வெட்டுக்களின் காலமும் பார்க்கையில் 13-ஆம் நூற்றாண்டு வாக்கில் இக்கோயில் பிரதான சிவன் கோவிலாக இருந்துள்ளது என்பதை அறியலாம். அதன் பின்னர் 17ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன் தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கக் கூடும். அதே போல் சிவன் சன்னதியும் அக்காலகட்டத்தில் பிரித்துக் கட்டியுள்ளதை அங்குள்ள நாயக்கர் காலத்திய தூண் சிற்பங்கள் மூலம் அறியமுடிகிறது என்றார்
பின்னாளில் சிவன் சன்னதியும் முக்கியத்துவம் வெகுவாக குறைந்து, "துர்க்கை அம்மனுக்கான” பிரதான கோயிலாக மக்கள் மத்தியில் மாறி உள்ளதை நம்மால் அறியமுடிகிறது. இன்று அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வமாக இக்கோவில் உருப்பெற்று கார்த்திகை தீபம் உற்சவத்தின் தொடக்கமாகத் துர்க்கையம்மன் உற்சவம் முதல் உற்சவமாக வழக்கில் உள்ளது