திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 3 நாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


3 நாள் விழா:


கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில், 25 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  திருவள்ளுவர் சிலையின் 25-வது ஆண்டு நினைவு சின்னத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இந்த வெள்ளி விழாவானது 3 நாள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது , வரும் 30 ஆம் தேதி தொடங்கி, 2025 ஜனவரி 1 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இவ்விழாவானது , முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி பட்டிமன்றம், கருத்தரங்கம் நிகழ்ச்சிகளுடன் கலை நிகழ்ச்சிகளும் எழுச்சியுடன் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கண்ணாடி பாலம் திறப்பு:


மேலும், ரூ. 37 கோடி செலவில் விவேகானந்தர் சிலையும் , திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கண்ணாடி பாலத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 




 


முதல் நாள்: வரும் 30 ஆம் தேதி, முதல் நாளில் சுகி சிவம் தலைமையில் திருக்குறளால் நன்மை தனிமனிதருக்கே சமுதாயத்திற்கே எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறவிள்ளது. 


இரண்டாள் நாள்: வரும் 31 ஆம் தேதி திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டி, திருவுருவச் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் வெளியிடுகிறார். மாலை 4.30 முதல் 7.30 மணி வரை பல்வேறு கலைஞர்கள் பங்குபெறும் அரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மூன்றாவது நாள் : ஜனவரி 1 ஆம் தேதி, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, உலகளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.