Thiruparankundram: நெருங்கும் தைப்பூசம்! திருப்பரங்குன்றத்தில் தொடரும் பதற்றம் - வேதனையில் பக்தர்கள்
Thiruparankundram Temple Issue: திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மாறி, மாறி நடத்தும் போராட்டங்களால் மக்களும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று உலக நாடுகள் பாராட்டினாலும், மதநல்லிணக்கத்திற்கு இந்தியாவிலே மிகச்சிறந்த உதாரணமான மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு ஆகும். இந்த நிலையில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் பதற்றம்:
தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். தைப்பூசம், கார்த்திகை, கிருத்திகை, செவ்வாய், வெள்ளி என முருகனுக்கு உகந்த நாட்களில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். மேலும், திருப்பரங்குன்றம் மலையில் மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக காசிவிஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் தர்காவும் உள்ளது.
மதநல்லிணக்கத்திற்கு இடையூறா?
இத்தனை ஆண்டுகளாக அங்கே இந்துக்களும், இஸ்லாமியர்களும் மலைக்கு மேலே சென்று முறையே கோயிலுக்கும், தர்காவிற்கும் சென்று வழிபட்டு வந்தனர். ஆனால், சமீபகாலமாக மதநல்லிணக்கத்திற்க கேடு விளைவிக்கும் வகையில் நடக்கும் நிகழ்வுகள் மக்களுக்கும், பக்தர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி போன்றவற்றை பலியிட வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முருகனின் அறுபடை வீடாகவும், காசிவிஸ்வநாதர் இருக்கும் திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மாறி, மாறி போராட்டம் நடத்தி வந்த நிலையில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெருங்கும் தைப்பூசம்:
இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டமிட்டிருந்த நிலையில் நேற்றும், இன்றும் மதுரை மாவட்டத்திற்கே 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. இதனால், நேற்றும் இன்றும் திருப்பரங்குன்றத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூசம் வரும் 11ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசத் திருவிழாவிற்காக நாளை கொடியேற்றப்பட உள்ளது. இந்த சூழலில், முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் இதுபோன்ற மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பதற்றமான சூழல் நிலவுவது மக்களுக்கும், பக்தர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அமைதி தேவை:
ஏனென்றால் தமிழ்நாட்டில் இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக மிகுந்த ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரம் பெற்றது முதலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் மதக்கலவரங்கள் நடந்தது கிடையாது. பெரும்பாலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
கோயில்களுக்கு நன்கொடைகளையும், வரிகளையுமே பல கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், திருப்பரங்குன்றத்தில் தற்போது நிலவும் இந்த பதற்றமான சூழலுக்கு நிரந்தரமான மற்றும் சுமூகமான முடிவை கொண்டு வர வேண்டும் என்று பக்தர்களும், மதுரை மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.