CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
CM Stalin TNSWA: தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

CM Stalin TNSWA: சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பள்ளிகளில் சூழல் மன்றங்கள் - முதலமைச்சர்
சென்னையில் 3-வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும்போது, “இயற்கை வளங்களை பாதுகாக்க நாம் அனைவரும் அக்கறை உள்ள சமூகமாக மாற வேண்டும். வெப்ப அலையை தணிக்க குடிநீர் பந்தல்கள் அமைக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதித்துள்ளோம். வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது” என அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும், “தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் அமைக்கப்படும்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அன்புமணி குற்றச்சாட்டு:
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று தொடங்கும் காலநிலை உச்சி மாநாட்டில், தமிழ்நாடு சதுப்புநிலங்கள் இயக்கமும் (TN Wetlands Mission) இதில் ஒரு அங்கமாக உள்ளது. தமிழ்நாடு மாநில சதுப்புநிலங்கள் ஆணையம் (TNSWA) அமைக்கப்பட்டு 6 ஆண்டுகள் 2 மாதங்கள் 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 2017 விதிகளின் கீழ் தமிழ்நாட்டின் ஒரே ஒரு சதுப்புநிலத்தைக் கூட இன்னமும் அறிவிக்கை (notification) செய்யவில்லை. இந்நிலையில் பின்வரும் வாக்குறுதிகளை முதலமைச்சர் அளிக்க வேண்டும்.
முதலமைச்சருக்கு கோரிக்கை:
1. 'இஸ்ரோ Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழகத்தின் 26,883 நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து மூன்று மாதத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் (Complete ground truthing as well as demarcation of wetland boundaries)' எனும் உச்சநீதிமன்றத்தின் 11.12.2024 உத்தரவின் படி அனைத்து நீர்நிலைகளின் எல்லைகளும் உடனடியாக வரையறை செய்யப்படும்.
2. தமிழகத்தின் அனைத்து சதுப்புநிலங்களும் 2017 விதிகளின் கீழ் உடனடியாக அறிவிக்கை (notification) செய்யப்படும்.
3. சென்னை மாநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் (Wetland City Accreditation of the Ramsar Convention) இணைப்பதற்காக தமிழ்நாடு அரசு பரிந்துரைக்கும்” என்கிற அறிவிப்புகளை தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0-ல் முதலமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம்:
தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்களில் சதுப்புநிலங்கள் மிகமிக முதன்மையானவை ஆகும். ஏரிகள். கழுவேலிகள், அலையாத்தி காடுகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 42.978 சதுப்புநிலங்கள் உள்ளதாக தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் குறிப்பிடுகிறது. சதுப்புநிலங்கள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கின்றன. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மாசுக்களை கட்டுப்படுத்துகின்றன. மண் அரிப்பைத் தடுக்கின்றன. மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்துகின்றன. மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கின்றன. பறவைகளின் ஆதாரமாக உள்ளன. புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றன. வெப்பத்தைக் குறைக்கின்றன.
நாசமாக்கப்பட்டுள்ள சதுப்பு நிலங்கள்:
பெரும் நன்மை பயக்கும் சதுப்பு நிலங்களை நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் பெருவாரியான சதுப்புநிலங்கள் பயனற்ற நிலங்களாக உருமாற்றப்பட்டுள்ளன. திடக்கழிவுகள், கழிவு நீர், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கேடுகளால் நாசமாக்கப்பட்டுள்ளன.
சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 (The Wetlands Conservation and Management Rules 2017) செயலாக்கப்படவில்லை. இந்த விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யப்படும் நீர் நிலைகளை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் எல்லையை மாற்ற முடியாது. ஆக்கிரமிக்க முடியாது. மாசுபடுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, இஸ்ரோ SAC Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது..