சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
வைரலாகும் அண்ணாமலை வீடியோ:
11 நொடிகள் ஓடும் அண்ணாமலை பேசும் வீடியோவில் “உங்களின் கைகளில் துப்பாக்கி இருக்கிறது. அதன் உள்ளே குண்டும் உள்ளது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்கள் சுட்டு தள்ளி விட்டு வந்துகொண்டே இருங்கள். மிச்சத்தை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திலே பார்த்துக்கொள்ளும்” என பேசியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சை உள்ளடக்கிய இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
திருமாவளவன் கண்டனம்:
அண்ணாமலையின் பேச்சுக்கு அவரது வீடியோவை குறிப்பிட்டு விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் “ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்' என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா?. மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா. முதலமைச்சர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்” என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை பேசியது என்ன?
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் ஒருவர் திமுக பிரமுகர் மற்றும் அவரது கூட்டாளிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இதை கண்டித்து, முன்னாள் ராணுவ வீரர்களை உள்ளடக்கிய ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் பாஜக அண்மையில் நடத்தியது. அதில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, “கொல்லப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு உடனடியாக ரூ10 லட்சம் காசோலை அளிக்கிறோம். அதைத் தாண்டி இரு குழந்தைகளையும் காலத்துக்கும் படிக்க வைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பார்டரில் இருக்கக் கூடிய ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் இங்கே இருந்து உரக்கமாக ஒரு செய்தியை சொல்கிறோம். இந்த அரசு உங்களோடு இல்லை என்றாலும் நாங்கள் உங்களோடு இருப்போம். உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளிட்டு வந்துகிட்டே இருங்க. மிச்சதை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பார்த்துக் கொள்ளும். எதற்கும் பயப்படாமல் பார்டரில் இருக்கக் கூடிய ஒவ்வொரு தமிழ்நாட்டை சேர்ந்த படை வீரனும் கூட இந்தியன் ஆர்மியில் இந்த பேட்சைப் போட்டுகிட்டு சொல்வீங்க” என பேசியுள்ளார். இந்த பேச்சின் ஒரு பகுதி தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.